நிகழ்காலத்தில் 35 வயதைத் தாண்டிய பலருக்கும் அவர்களின் சிறுபராயம் சொர்க்கம் மாதிரி அந்தநாட்களில் நடந்த ஒவ்வொரு நினைவுகளிலிலும் இன்றளவும் வாழும் எத்தனையோ பேர் உள்ளனர். “நாங்கல்லாம் அந்த காலத்தில” என்று கவுண்டமணி டயலொக் இல் ஆரம்பித்தால் ஒவ்வொருவரும் சொல்வதற்கு ஆயிரமாயிரம் நினைவுகளை வைத்திருப்பார்கள். கைபேசி இல்லாத காலம் அந்த அழகான நினைவுகளில் தொலைக்காட்சி பற்றிய ஒரு பதிவு 👇
1980 டிவி – ஒரு பின்னோக்கிய பார்வை.
1985 க்கு முன்னாடி பிறந்தவங்களுக்கு தான் ஆன்டெனாவை தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.
இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் ஒய்ட் டிவி சின்ன சைஸ் வச்சிருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சிருந்தா கோடீஸ்வரன்ன்னு அர்த்தம். அப்போது டிவிங்கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும். 1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவிக்கு மரத்தினால் ஆனா கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும். நமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும்போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க “ஏன் தம்பி வெளிய நிக்குற” வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு” ன்னு அன்பா கூப்பிடுவாங்க.
80 களின் தொடக்கத்தில் பெரும்பாலும் சின்ன சைஸ் டிவிகளே வந்தன, டிவி பார்க்கும் போது மேல் இருந்து கீழாக கோடு வந்து கொன்டே இருக்கும். 80 களின் மத்தியில் தான் தான் கோடு வராத டிவி வந்தது. 80 களின் இறுதியில் தான் கலர் டிவி வந்தது. சிலர் டிவியில் படம் பெரியதாக தெரிய வேண்டும் என்பதற்க்காக திரைக்கு முன்பு ஒரு அடி தூரத்திற்கு லென்ஸ் வைத்து இருப்பார்கள். சிலர், கருப்பு-வெள்ளை டிவியில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களால் ஆன பிளாஸ்டிக் கவர்களில் அவர்களுக்கு பிடித்த வண்ண கவர்களை வாங்கி பொருத்தி இருப்பார்கள்.
சில வீடுகளில் உள்ளெ சென்று பார்க்க வேண்டும், உள்ளே என்றால் எள் விழ இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும் அந்த வீட்டினுள். சில வீடுகளில் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் டிவி யை வெளியே வைத்து விடுவார்கள். அந்த தெருவில் உள்ள பெரியவர் டிவி பார்க்க வந்து விட்டால், டிவி வைத்திருக்கும் வீட்டில் உள்ள குடும்பத்த தலைவரே தான் உட்காந்து இருந்த கட்டிலில் இருந்து இறங்கி கீழே உட்காந்து கொண்டு அவருக்கு கட்டிலில் இடம் அளிப்பார்.
சில வீடுகள்ல கூட்டம் சேர்ந்துடுச்சுனா சும்மானாச்சும் ஆஃப் பண்ணிட்டு அப்புறம் கூட்டம் கலைஞ்ச உடனே டிவி மறுபடியும் ஆன் பண்ணுவாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம நண்பர்களும் ஆஃப் பண்ணும்போது “எஸ்” ஆகிட்டு, ஆன் பண்ணும் போது கரெக்ட்டா மறுபடியும் வந்துடுவாங்க. அப்படி டிவி ஆப் பண்ணிட்டு கதவை அடைச்சுட்டா எத்தனை தெரு தாண்டினாலும் டிவி இருக்கிற வீட்டை கண்டுபுடிக்க உதவுறதுதான் இந்த ஆண்டெனா. வீட்டு கூரை மேல ஆண்டெனா இருந்தா வீட்டுக்குள்ள டிவி இருக்குனு அர்த்தம்.
வீட்டின் மேல் ஆண்டெனா மாட்டி விட்டாலே நாலு தெரு வரை மக்கள் வந்து விசாரிப்பார்கள், “டிவி வாங்கிட்டிங்களாக்கும், எத்தனை ரூபாய்?, ஹையா ஜாலி, இனிமே உங்க வீட்டுலயே வந்து பாத்துக்கலாம்” என்று நட்புடன் சிலரும், “டிவி மட்டும் வாங்கி இருக்கீங்க, சீக்கிரம் அதுக்கு ஒரு பொட்டி செஞ்சு போடுங்க” என்று டிவி மீதி அக்கறையாக சிலரும் பேசுவார்கள்.
அப்போ நமக்கு இரண்டே சானெல்கள் சென்னை தொலைக்காட்சியும், டெல்லி (Doordarshan) தொலைக்காட்சியும். இப்போது உள்ளது போல் 500 சானெல்கள் எல்லாம் கிடையாது. காலை 9.00 மணி முதல் மாலை 5.30 வரை டெல்லி தூர்ஷார்ஷன், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்னை தொலைக் காட்சி. ரிமோட்டிற்கு எல்லாம் அப்போது வேலையை இல்லை. டிவி ஆன் பண்ண ஆஃப் பண்ண மட்டும்தான் ரிமோட்.
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஒரு மினி திருவிழா என்றால், ஞாயிற்றுக்கிழமை சினிமா ஒரு பெரிய திருவிழா. அதிலும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான் . எப்போவது கலர் படங்கள் வரும். வெள்ளிக்கிழமை 7.00 மணிக்கு வரும் எதிரொலி நிகழ்ச்சியில் அந்த வார படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். தங்கள் அபிமான நடிகர் படம் என்றால் அறிவிப்பு வரும்போதே கைதட்டல் காதைப் பிளக்கும்.
ஞாயிறு மாலை 5.30 க்கு படம் போடுவார்கள், இப்போது உள்ளது போல் படங்கள் இடையே விளம்பரங்கள் செய்யும் யுக்தி அப்போது இல்லை. விளம்பரம் 5.00 மணிக்கு ஆரம்பித்து, சரியாக முப்பது நிமிடங்கள் ஓடும். படம் ஆரம்பித்து விட்டால் இடையில் விளம்பரம் கிடையாது. ஒளிபரப்பு தொழில் நுட்ப பிரச்சினையில் நின்று விட்டால் “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்ற போர்டு மட்டும் வரும். படத்தின் நடுவே வேறு எந்த தொந்தரவும் இருக்காது.
பக்கத்துக்கு வீட்டு மாமி, எதுத்த வீட்டு அக்கா, அடுத்த வீட்டு பாட்டி என்று எல்லாரும் சரியாக மாலை 5.00 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்து விட்டு விளம்பரம் போடும்போது அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் இருக்கும், ஒரே ஒரு டிவி முன்பு ஆஜர் ஆகிவிடுவார்கள்.
பெண்கள் அனைவரும் ஏதோ கோவிலுக்கு செல்வது போல நன்றாக தலைசீவி, பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு வருவார்கள் டிவி பார்க்க. சினிமாவே புடிக்காது என்று வீராப்பு காட்டும் மாமா கூட படம் ஆரம்பித்த பிறகு யாருக்கும் தெரியாமல் நைசாக கடைசி வரிசையில் வந்து உட்காந்து விடுவார். வழக்கமாக டிவி பார்க்க வரும் ஒருவர் அன்று வர வில்லை என்றால், ஏன் அவருக்கு உடம்பு சரி இல்லையா? என்று கூட்டம் நலம் விசாரிக்கும். “டேய், ஒரு எட்டு அந்த மாமிகிட்ட போய், படம் போட்டாச்சுன்னு சொல்லு” என்று பக்கத்துக்கு வீடு அக்கா, தன் பையனை மாமி வீட்டிற்கு அனுப்புவார்.
சோக காட்சிகளை கண்டு வெம்பி மனம் வெதும்பும் பெருசுகளைப் பார்த்து இளசுகள் கிண்டல் செய்வது தனி சுவாரசியம். சில நகைச்சுவை காட்சிகளை இளசுகள் பட்டாளம் சிரித்து ரசிக்கும் “இதுல என்ன இருக்குன்னு இப்படி சிரிக்கிறீங்க” என்று பெருசுகள் பட்டாளம் கவுண்டர் கொடுக்கும்.
சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படங்களின் வரிசையில் மாதம் ஒரு முறை தமிழ் படம் வரும். அதில் வீடு, உதிரிப்பூக்கள் என்று அவார்ட் வாங்கின படமாக போடுவார்கள். அன்னைக்கு மட்டும் எல்லாருக்கும் கை, கால் ஓடாது, இன்னைக்கு ரெண்டு படம், ரெண்டு படம் என்று ஊரே ஜே ஜே என்று இருக்கும்.
அதே போன்று பெரிய தலைவர்கள் யாரும் இறந்து விட்டால், டிவி யில் செய்தி தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு சோக வயலின் இசை மட்டும் ஒலித்துக் கொன்டே இருக்கும். 1984-ல் இந்திரா காந்தி இறுதி ஊர்வலமும், 1987 ல் எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலம் டிவி தந்த மிகப் பெரிய சோக சுவடுகள்.
1983-ல் கபில் தேவ் தலைமையில் ஆனா இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது டிவி தந்த மறக்க முடியாத வெற்றி நிகழ்வு.
அப்போது எல்லாம் டிவி வைத்து இருக்கும் வீட்டுக்காரர்களிடம் யாரும் எந்த சண்டைக்கும் போக மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் நட்பு வைத்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டம் இருக்கும், தெருவில். விளையாட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிவி இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் அதற்கு பிஸ்கட் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
படத்தின் போது, இடையே வரும் செய்திதான் எல்லாருக்கும் இடைவேளை. செய்தி போட ஆரம்பித்த உடன் பெண்கள் கூட்டம் கலைந்து வீட்டிற்குச் சென்று மிச்சம் மீதி உள்ள வேலைகள், குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை முடித்து கொண்டு வரும். விவரம் தெரிந்த ஆண்கள் மட்டும் உட்காந்து செய்தியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
செய்தி முடிந்து சிறிது நேரம் விளம்பரம், அப்போது கூட்டம் அவரவர் தான் முன்பு உட்காந்து இருந்த அதே இடத்தில சண்டை போடாமல் வந்து அமர்ந்து கொள்ளும்.
அப்போது செய்தி வாசித்த, ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், பாத்திமா பாபு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஷோபனா ரவியை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை.
இப்படி படம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாதான். பாடல் என்றால் வெள்ளிக்கிழமை போடும் ஒலியும் ஒளியும் மட்டும் தான். 5 பாடல்களை பார்க்க ஒரு வாரம் முழுவதும் தவம் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை கரெண்ட் போய் விட்டால் அந்த ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும். அந்த வாரமே கருப்பு வாரமாக மனதில் பதிந்து விடும். இப்போது உள்ளது போன்று ஆயிரத்து எட்டு மியூசிக் சேனல்கள் அன்று கிடையாது. அப்படியே கரண்ட் இருந்து ஒலியும் ஒளியும் பார்த்தாலும் நமது அபிமான நடிகர் பாடல் ஒரு இருவாராம் தொடர்ந்து வரவில்லை என்றால், “தொலைக்காட்சில வேணும்னே அவர் பாட்ட போட மாட்டுக்கிறாங்க” என்று கண்டனக் குரல்கள் மெலிதாக வரும்.
செவ்வாய்க்கிழமை போடும் ஒரு மணி நேர நாடகத்திர்ற்கு அவ்வளவு மதிப்பு. இரவு 7.30 முதல் 8.30 வரை வரும், நாடகத்தின் முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். மற்ற நாட்களான திங்கள், புதன்-வெள்ளி யில் அரை மணிநேரம் இரவு 7.30 – 8.00 தொடர்கள் ஒளிபரப்பாகும். கே. பாலச்சந்தரின் “ரயில் சிநேகம்”, சோ வின் “ஜனதா நகர் காலனி” நடிகை ராகவி (ராஜ சின்ன ரோஜா வில் நடித்தவர்) நடித்த “சக்தி 90”, Y. G. மஹேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்த “சாத்தியமா சொல்றேன்”, காத்தாடி ராம மூர்த்தியின் “பஞ்சு-பட்டு-பீதாம்பரம்”, ரகுவரன் போதைக்கு அடிமையானவராக நடித்த “இது ஒரு மனிதனின் கதை”, சுஜாதாவின், கணினியை மையமாக வைத்து ஒளிபரப்பான அறிவியல் தொடர் “என் இனிய இயந்திரா” (இன்றைய “எந்திரன்” படத்திற்கு அதுதான் முன்னோடி) போன்ற தொடர்களுக்கு தனி மவுசு. இப்போது உள்ள சீரியல்களில் உள்ளது போன்று, ஒரு குடும்பத்தைக் கெடுப்பது, கள்ள உறவுகள், பச்சிளம் குழந்தைக்கு விஷம் வைப்பது, சதி திட்டம் தீட்டுவது போன்ற எந்த காட்சியும் அன்று இருக்காது.
இதையும் தாண்டி மொழி தெரியாவிட்டாலும் நாம் பார்க்கும், புதன் கிழமை – சித்ரஹார், சாந்தி தொடர், சனிக்கிழமை ஹிந்தி படம், ஷாருக்கான் நடித்த “சர்க்கஸ்” தொடர், இந்தியாவின் பாரம்பரியத்தை சொல்லும் அற்புதமான தொடரான “சுரபி” என்று வேறு ரகங்களும் உண்டு.
ஞாயிறு காலை ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் தினமும் இரவு ஒளிபரப்பான சஞ்சய் கானின் “திப்பு சுல்தான்” தொடரை பார்க்காதவர்கள், இன்று 35 வயதினைத் தாண்டியவர்களில் எவரும் இல்லை. அவ்வளவு பிரபலம். இப்போது உள்ளது தமிழ் போன்ற டப்பிங் எல்லாம் அப்போது இல்லை, புரியாத இந்தியில் தான் பார்க்க வேண்டும்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை திரைப்படத்திற்கு முன்னோட்டமாக வருவது காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளி பரப்பாகும் திரை மலர் தான். தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அனைவரிடமும் சென்று அடைந்தது அந்த கால கட்டங்களில்தான். அனைவரும் ஒரே நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அதன் பின்னரும் அதில் வந்த நாடகங்கள், நடிகர்களின் பேட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.
அன்று ஒரு தெருவே ஒற்றுமையாக இருந்து டிவி பார்த்த காலம் போய், இப்போது நம் குடும்ப உறுப்பினர்களுடன் கூட ஒன்றாக டிவி பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனக்கு புடித்த சானல் தான் வேண்டும் என்று சண்டை வேறு. போதாக்குறைக்கு ரூமிற்க்கு ஒரு டிவி, கைக்கு ஒரு செல் போன் வைத்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து விடுகிறோம். 500 சேனல்ககள் இருந்தாலும், எதிலும் மனம் லயிப்பதில்லை. ஒரு நாளைக்கு 1000 பாடல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அன்று வாரம் ஒரு முறை ஒலியும் ஒளியும் தந்த மகிழ்ச்சி ஏனோ இப்போது வருவது இல்லை.
இன்று ஆன்டெனாக்கள் மட்டும் மறையவில்லை, நம் ஒற்றுமையும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சேர்ந்தே மறைந்து விட்டது.
அ முதல் அஃகு வரை.
இந்த ஏக்கங்கள் வெறுமனே ஒருவருடையதல்ல இந்த பதிவுக்கு கீழே பல 90 ஸ் கிட்ஸ் தங்களது ஏக்கங்களைக் கமெண்ட்ஸ் இல் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
👉இரண்டே சேனல் தான் என்கிறீர்கள் ஆனால் எங்கள் டெல்டா பகுதிகளில் இலங்கை ரூபவாகிணி மிகப் பிரபலம். காலநிலை நன்றாக இருக்கும் போது மிகத் தெளிவாக கிடைக்கும். காலநிலை மாறும் போது புள்ளி புள்ளியாக தெரியும். அதில் மாதத்துக்கு இருமுறை வெள்ளிக்கிழமை இரவு தமிழ் திரைப்படம் மிகப் பிரபலம். பஞ்சாயத்து போர்டு டிவி யில் இரவு ஒரு மணி வரையும் பார்த்துவிட்டு தூங்குவது வழக்கம்.
மேலும் அப்போது பகலில் நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாததால் டெக் வைத்திருக்கும் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வோம். அதையெல்லாம் இப்போது நினைத்தால் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வெட்கப்படும்படியாகவும் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எவ்வளவு முகம் சுளித்தாலும் படம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்று சங்கோஜம் அறியாத சிறு வயது அது.
👉எதையும் ஒரு அளவோடு இருந்தால் தான் ரசிக்க முடியும் சன் டிவி என்ற தனியார் ஒளிபரப்பு தொடங் கிய பிறகு அதிக தனியார் சேனல்கள் வர ஆரம்பித் தவுடன் ஜனங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று தெரிவதில்லை எதுவும் அளவோடு இருந்தா தான் ரசிக்க முடியும் என்பது உண்மை old is gold .
👉பசுமை நிறைந்த நினைவுகளே,, பாடி திரிந்த பறவைகளே,,, பழகி கழித்த தோழர்களே ,,, நாம் பறந்து செல்கிறோம் இன்று அழிவு பாதையை நோக்கி,,,,
👉இலங்கை அரசு ரூபவாஹினி மற்றும் 90 களில் ITN என்ற ஜனரஞ்சக நிகழ்ச்சி வழங்கும். இலங்கை மற்றும் கொடைக்கானல் தரைவழி ஒளிபரப்பு தெளிவாக தெரிவதற்கு இரண்டு ஆண்டெனா மற்றும் நிறைய பேர் UMS booster வாங்கி வந்து இருப்பார்கள். சித்ரமாலா என்று பல மொழி களில் உள்ள திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிறு காலை 7.20 க்கு ரங்கோலி நிகழ்ச்சி ஹிந்தி பட பாடல் ஒளிபரப்பு ஆகும்.
👉1990 களில் அடுத்தவர்கள் வீடுகளில் டிவி பார்க்க நிறைய அசிங்கப்பட்டதுண்டு வெளிய போகச்சொல்லி கதவை அடைத்து விடுவார்கள் மனவலியோடு வந்து விடுவேன் பின் யார் வீட்டிற்கும் டிவி பார்க்க போக கூடாது என்று வைராக்கியமாக இருந்து விட்டேன் பின் எங்கள் அப்பா ஒரு போர்டபிள் பிளாக்&ஒயிட் டிவி வாங்கி வைத்தார் சந்திரகாந்தா சீரியல் என் பேவரைட் இப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு டிவி வைத்துள்ளேன் பார்க்க விருப்பமில்லை
👉அது செம்ம காலம், நான் 1983 ப்பா, எங்க வீட்ல டிவி கிடையாது அப்போ, பக்கத்து வீட்டு வாசல்ல வுக்காந்துதான் ஏழு குடும்பம் டிவி பாப்போம், எனக்கு ஒருசில மட்டும்தான் ஞாபகம் இருக்கு. ஒளியும் ஒலியும், அப்புறம் DD செய்திகள் வாசிப்பது சோபனாரவி, அப்றம் மீசை இல்லாமல் ஒருத்தர் செய்தி வாசிப்பார் அவர் பெயர் ஞாபகம் இல்லை.🤦🏾♂️ அடிக்கடி ஆண்ட்டனாவை திருப்பனும் அப்போதான் ஒழுங்கா டிவி தெரியும். ஒருத்தர் அதை திருப்ப, மற்றொருவர் டிவி பக்கத்தில் இருந்துகொண்டு தெரியல தெரியல என்று கத்துவோம். பெரும்பாலும் மரப்பெட்டி உள்ளேதான் டிவி இருக்கும். அப்றம் நெறய சொல்லிட்டே போகலாம். 😥😥😥 அந்த நாட்களை நினைத்து கண் கலங்குது 😔😔😔😥😥😥
👉என்ன ஓரு கவலையில்லா காலம் அது இப்போது கோடி காசு இருந்தாலும் அந்த நிம்மதி இன்று கிடையாது வாழ்த்துகள் நண்பரே முக்கியமான ஒன்றை விட்டுட்ங்க நண்பரே சக்திமான் கதை 12 மணிக்கு வேற லெவல்💞💞💞
👉ஷட்டர் வைத்த சாலிடர் டிவி… டயனோரா… அப்போது பிரபலமான டிவிகள். வெள்ளி கிழமைகளில்… ஒளியும் ஒலியும்… ஞாயிறு அன்று தமிழ் படம்… ஞாயிறு காலையில் மகாபாரதம் (அதுவும் காலையில் எழுந்து… குளித்து விட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு பக்தியுடன் உட்கார்ந்து) பார்ப்போம்.
👉ஒரு சாம்சங் TV ஐ வைத்துக்கொண்டு நாங்கள் பட்ட பாடு. அது மேலும் கீழுமாக ஓடும். ஒருவரை அண்டெனாவை திருப்ப வீட்டின் மேல் அனுப்பி திருப்ப சொல்லி சரியான படம் வரும் வரை நாம் படும் கஷ்டம் ஒரு என்ஜினீயர் வேலை மாதிரி இருக்கும்.