மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினமாக இருந்தாலும், வணிகத் துறையில் காணப்படும் ஒரு முக்கியமான முரண்பாடு தற்போது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பேக்கரிகள் போன்ற வெதுப்பகங்கள் இந்த நாளில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அந்தக் கடைகளை நடத்தும் முதலாளிகள் மட்டும் வேலை செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர்; அவர்களது ஊழியர்களுக்கு இந்நாள் வேலைக்கான சட்ட அனுமதி இல்லை என்பதே பெரும் சிக்கலாக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு வாண்டே (Vendée) பகுதியில், ஐந்து பேக்கரிகள் தங்கள் ஊழியர்களை மே 1-ஆம் தேதி வேலைக்கு அழைத்ததற்காக அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் சிக்கின. இது பேக்கரி துறையின் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பேக்கரி கூட்டமைப்புத் தலைவர் டொமினிக் அன்ராக்ட் (Dominique Anract) இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து, “பேக்கரிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மே 1-ஆம் தேதி திறந்திருப்பது வழக்கம். இது நமது கூட்டு ஒப்பந்தங்களில் கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சட்டம் தெளிவில்லாமல் இருப்பதால், தொழிலாளிகளும், முதலாளிகளும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள்,” என தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையை சரிசெய்யும் முயற்சியாக, தொழிலாளர் விவகார அமைச்சராகிய கத்தரின் வோத்ரின் (Catherine Vautrin) மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகிய ஆஸ்ட்ரிட் பானோசியான்-பூவே (Astrid Panosyan-Bouvet) ஆகியோர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர தயாராக உள்ளனர். இவர்களின் நோக்கம் – ஊழியர்கள் தங்களது விருப்பப்படி மே 1-ஆம் தேதி வேலை செய்ய அனுமதி பெறும் உரிமையை சட்ட ரீதியாக உறுதி செய்வது.
இந்த நடவடிக்கை, பாரம்பரியதையும் தொழிலாளர் உரிமையையும் சமநிலைப்படுத்தும் ஒரு முயற்சி எனக் கருதப்படுகிறது.