Luxman Vithyah என்பவரின் facebook பதிவிலிருந்து
“பிரான்சின் ‘BULAC’ நூலகம் (மொழிகள் மற்றும் நாகரீகங்களுக்கான பல்கலைக்கழக நூலகம் – Bibliothèque universitaire des langues et civilisations) உலகளாவிய பார்வையில் தமிழின் இடம்
பிரான்சின் BULAC நூலகம் என்பது பல்வேறு மொழிகளையும் நாகரீகங்களையும் மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு சிறப்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்கள் அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நூலகத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது, அதனால் இதைப் பற்றி அறிந்து கொள்ளக்கூட Google-ல் தேடிய பிறகு, நேரடியாக சென்று பார்வையிட்டேன்.
பரிசில் இப்போது கடும் குளிர்காலம், வீதியெங்கும் பனி விழுந்து கொண்டிருந்தது. இந்நூலகம் பல்வேறு மொழிகளைக் கொண்டு அறிவை பரப்பும் ஒரு மையமாக திகழ்கிறது. இதன் அமைதி மற்றும் மாணவர்களின் ஈடுபாடு என்னை பெரிதும் கவர்ந்தது.
BULAC 2008ம் ஆண்டில் கட்டிடத்திட்டம் தொடங்கப்பட்டு, 2011 டிசம்பர் 12 அன்று திறக்கப்பட்டது. இதன் வடிவமைப்பை Maroc நாட்டைச் சேர்ந்த நகர்ப்புறக் கட்டிடக்கலைஞர் மற்றும் பிரெஞ்சு பேராசிரியர் ‘Yves Lion’ இணைந்து மேற்கொண்டனர். மொத்தம் 15000 சதுர மீட்டர் பரப்பளவில் 910 பிரிவுகளாக இதன் தளங்கள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு 2.5 மில்லியன் யூரோ செலவில் பராமரிக்கப்படும் இந்நூலகம், உலகளாவிய பார்வையில் மொழிகளின் பங்கினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
தமிழின் BULAC-இல் முன்னிலை
தமிழர்களாகிய எமக்கு இந்நூலகத்தில் Tamil Section இருப்பது மிகப் பெருமையான விஷயமாகும்.
ASIE பிரிவில் ’41LK Srilanka’ என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன.
அதில் குறிப்பாக,
👉தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’,
👉பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பியின் ‘யாழ்ப்பாணம்’,
👉ஷோபா சக்தியின் ‘ம்’ மற்றும் ‘முப்பது நிறச் சொல்’,
👉கருணாகரனின் ‘வேட்டைத் தோப்பு’,
👉பழநெடுமாறனின் ‘பிரபாகரன்’,
👉பா. ஏகலைவனின் ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’
👉அன்ரன் பாலசிங்கத்தின் ‘போரும் சமாதானமும்’
👉பாவை சந்திரனின் ‘ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாறு’ போன்ற நூல்கள் உள்ளன.
மேலும் வள்ளிநாயகி எழுதிய ‘யாழ்ப்பாண சமூகத்தின் பெண் கல்வி-ஒரு ஆய்வு’, தொ.பத்தினாதனுடைய ‘போரின் மறுபக்கம்’, எஸ்.ஐ.கீதபொண்கலனுடைய ‘இலங்கையில் இனமோதலும் சமாதானமும்’ மற்றும் ‘மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’, கலாபூசனம் செல்லத்துரை எழுதின ‘ இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வென்ன’, வண்ணை தெய்வம் எழிதிய ‘யாழ்ப்பாணத்து மண்வாசனை’, கோபாலரத்தினம் எழிதிய ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’, சுந்தரலிங்கத்தினுடைய ‘வன்னி’, கமலநாதனுடைய ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’, தமிழினியிடைய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, பா.ராகவனுடைய ‘பிரபாகரன் வாழ்வும் மரணமும்’, டி.ஆர்.காத்திகேயனுடைய ‘ராஜீவ்காந்தி படுகொலை’.. அப்பப்போ எத்தனை எத்தனை. அத்தனையும் பொக்கிஷம்.
வெளியே வர மனமே இல்லை. குறைந்தது இரண்டு நாட்களாவது இங்கிருந்து இந்தப் புத்தகப் பக்கங்களை பிரட்ட ஆசை. அவசர அவசரமாய்க் கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. கதவு திறந்தேன். பரிசின் வாகன இரைச்சல் மெல்ல மெல்ல காதில் விழத் தொடங்கியது.
திங்கள் முதல் சனி வரை காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையென நீண்ட நேரம் திறந்திருக்கும் இந்நூலகத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள். உங்கள் நாட்களை பயனுள்ளதாய் மாற்றுங்கள்.”
தமிழ் இலக்கியம், வரலாறு, அரசியல், சமூக ஆய்வு ஆகிய பல்வேறு துறைகளில் நூல்கள் இருப்பது, BULAC நூலகம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அளிக்கும் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்மொழி வெறும் ஒரு மொழி மட்டுமல்ல, அது உலகமுழுவதும் ஒரு நாகரீகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த இடமெல்லாம் தங்களது மொழியை, கலாச்சாரத்தை பரப்பியுள்ளனர். கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் தமிழ் பள்ளிகள், இலக்கிய அமைப்புகள், புத்தகக் கடைகள், தமிழ் மாநாடுகள் நடைபெறுவதால் தமிழ் மொழியின் வளர்ச்சி தொடர்கிறது.
BULAC நூலகம் போன்ற இடங்களில் தமிழுக்கான தனி பிரிவுகள் ஏற்படுத்தப்படுவதால், தமிழ் இலக்கியம் உலகளாவிய பார்வையில் அழியாமல் வளர்ச்சியடைவதற்கான வழிவகுப்பு ஏற்படுகிறது.
இத்தகைய நூலகங்கள், தமிழ் மொழியின் இடத்தை ஒரு சர்வதேச தரத்தில் உயர்த்தும் முக்கிய ஊடகங்களாக மாறுகின்றன. தமிழர்களாகிய நாம் இதனை பெருமையாகக் கொண்டாட வேண்டும்.
அடுத்த முறை பாரிசுக்கு வரும்போது, இந்த BULAC நூலகத்திற்குச் சென்று அங்கு உள்ள தமிழ் நூல்களை அணுகி படிப்பதன் மூலம் உங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.