ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல், இன்று முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனடாவில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.
எந்தெந்த பொருட்கள் விலை உயரும்?
முதலில் பாதிக்கப்பட இருப்பது மளிகைப்பொருட்கள்தான். குறிப்பாக, எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் அதிக விலை அதிகரிப்பை எதிர்கொள்ளலாம். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் கனடாவில் விற்பனை செய்யப்படும் விலையில் நேரடி தாக்கம் ஏற்படும்.
அமெரிக்காவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஃப்ளோரிடா ஆரஞ்சுகள், விஸ்கான்சின் cheddar வகை சீஸ் ஆகியவை விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கனேடியர்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் விலை உயரக் கூடும்.
அமெரிக்கா, கனேடிய பொருட்கள் மீது 25% வரி விதிக்கின்றபோது, பதிலடியாக கனடா அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்தால், அதன் விளைவாக சாலட், லெட்டூஸ் கொண்ட சாண்ட்விச் போன்ற உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும்.
மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த வரி விதிப்பின் காரணமாக, கனேடிய மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்:
உணவுக் கட்டணம் அதிகரிப்பு: உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும்.
உள்நாட்டு பொருட்களின் தேவை அதிகரிப்பு: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பால், கனேடிய உள்நாட்டு விவசாய மற்றும் உணவு தயாரிப்பு வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதன் மூலம் குறுகிய காலத்திலேயே தீர்வு கிடைக்காது.
வணிகங்களின் மீதான தாக்கம்: உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள் இந்த மாற்றத்தால் பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதிக விலையால் வாடிக்கையாளர்கள் விரும்பிய பொருட்களை வாங்கும் போது பல்வேறு மாற்றங்களைச் செய்ய நேரிடலாம் அதாவது வழமையாக விரும்பி வாங்கும் பொருட்களை கூட வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யாமல் இருக்கலாம்.
அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்: கனடா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போக்குவரத்து புதிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
ட்ரம்பின் வரி விதிப்பால் கனேடிய மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைச் சவால்கள் அதிகரிக்கக்கூடும். உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் செலவுகள் பெருகலாம். இருப்பினும், இது கனடாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வாய்ப்பாக அமையலாம். அரசாங்கம் மற்றும் தொழில்கள் இந்த மாற்றத்துக்கு பொருத்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியமாகும்.