பாடசாலை அருகில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதனால் பாடசாலைகளை மூடவேண்டும் என்ற தீர்மானம் ஏற்க முடியாதது என 75 சதவீத மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல பிரபல ஊடகங்கங்களின் சார்பில் புள்ளிவிபர நிறுவனமான CSA இனால் பொதுமக்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே மக்கள் இவ்வாறு தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சன் துவானில் (Saint-Ouen – Seine-Saint-Denis உள்ள எமில் சோலா (Emile-Zola) மழலைகள் பாடசாலையின் நான்கு வகுப்புகளும் அதன் நித்திரை அறையும் (dortoir) இடம் மாற்றம் செய்வதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனை நடப்பதோடு அல்லாமல், மழலைகள் பாடசாலையில் பிள்ளைகள் விளையாடும் திடலிலும், பல தடவைகள் போதைப்பொருள் சரைகள் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் அங்கு கிடைக்கும் போதைபொருள்களை என்னவென்று அறியாமல் அதை உட்கொண்டால் மரணம் கூட சம்பவிக்கும் வாய்ப்பு காணப்படுவதால் இந்தப் பாடசாலையை இடம் மாற்ற முழுச் சம்மதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு ஒவ்வொரு பாடசாலைகளும் போதைப்பொருள் விநியோகங்களுக்கு அஞ்சி பாடசாலைகளை மூடுவதும், இடம் மாற்றம் செய்வதும், தொடரக்கூடாது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சமூக சீர்கேடு நடவடிக்கைகளுக்கு அஞ்சுவது குறித்த குற்றவாளிகளை மேலும் இவ்வாறான தவறுகளை செய்யத் தூண்டும் செயலாகும். பாடசாலைகளை இடம் மாற்றாமல், போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னபதே மக்கள் கருத்தாக உள்ளது.