சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.
கடந்த புதன்கிழமை, கிழக்கு பிரான்சிலுள்ள Bonneville என்னுமிடத்துக்கு அருகே ட்ரக் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அப்போது அவ்வழியே பயணித்த சுமார் 240 வாகனங்களின் சாரதிகள், தங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, அந்த விபத்தை தங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
பிரான்ஸ் சாலை விதிகளின்படி வாகனங்களை ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதற்கும், தேவையில்லாமல் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, விபத்தை புகைப்படம் எடுத்த அந்த சாரதிகள் அனைவருக்கும் சுமார் 100 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சமுக பொறுப்புள்ள மனிதர்கள் என்ற கோணத்தில் நோக்கினால் இந்த சாரதிகளின் நடத்தை முற்றிலும் தவறானது. பிரான்ஸ் நாட்டின் சட்டதிட்டங்களையும் தாண்டி ஒரு பொறுப்புள்ள மனிதர்களாக குறிப்பாக, ஒரு விபத்து நிகழும் போது, புகைப்படம் எடுக்கும் அல்லது வீடியோ பதிவை மேற்கொள்வதற்கு பதிலாக, நாம் அந்த நேரத்தில் முதன்மையாக செய்ய வேண்டியது உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளையே செய்ய வேண்டும். சாரதிகள் மீதான அரசின் இந்த நடவடிக்கை மீண்டும் பிரெஞ்சு சட்டத்தை மக்களிடையே வலியுறுத்துவதாக அமையும்.