Read More

spot_img

வழிமாறும் யாழ்ப்பாணத்தார் பணம்!

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், தனது முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் இதேபோன்ற வர்த்தக சாதனையை ஏற்படுத்தியது.

மல்டிநேஷனல் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல புதிய வர்த்தகங்கள் வடக்கில் பெருகி வருகின்றன. குறிப்பாக, சென்னை பிரியாணி கடைகள் எங்கும் வளர்ந்து வருவதைக் காணலாம். இந்த முதலீடுகள் வடக்கில் அதிகரிப்பதை நாம் எதிர்ப்பதில்லை. ஆனால், இவற்றால் வடக்கில் உருவாகும் பணப்புழக்கம் அப்பகுதிக்கு உரியவர்களுக்கு இல்லாமல் வெளியே செல்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

போர் முடிந்து ஒன்றரை தசாப்தங்கள் கடந்தும், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நிதி வளமிக்க தமிழ் தொழிலதிபர்கள் வடக்கில் பாரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது கவலைத்தக்க நிலை. இதன் விளைவாக, ஒரு இனத்தின் பொருளாதார வீழ்ச்சி தொடர்கிறது.

எல்லா வழிகளிலும் இழப்பை சந்தித்த ஒரு சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால், இதற்கான முயற்சிகள் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் பெரிய வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டு, அதிலிருந்து உருவாகும் வருமானத்தை மீண்டும் அதே பகுதியின் வளர்ச்சிக்கு திருப்புவது மட்டுமே ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

மேலும், மேலைநாட்டு உணவகங்கள் மற்றும் தமிழ்நாடு பிரியாணி கடைகள் வடக்கில் பெருகுவது, எமது பாரம்பரிய உணவுகளை மறந்து செல்லும் ஆபத்தை உருவாக்குகிறது. தமிழர்கள் உலகத்திற்கு பலவிதமான, ஆரோக்கியமான உணவுகளை வழங்கிய மக்கள். குறிப்பாக, யாழ்ப்பாண உணவுகளுக்கு சர்வதேச அளவில் மதிப்பும் ஈர்ப்பும் உள்ளது. ஆனால், இன்று வடக்கில் உணவகங்கள் திறக்கப்பட்டாலும், பாரிய முதலீடுகள் இல்லை. இதனால், அந்த இடத்தை மற்றவர்கள் நிரப்பி வருகின்றனர்.

எம் உணவுகளை உயர்தரமாக வழங்கக்கூடிய பெரிய உணவகங்களை வடக்கில் உருவாக்க வேண்டும். எம் உணவுகளின் சிறப்பை வெளிநாட்டவர்களும் அனுபவிக்க வேண்டும். ஆனால், எதிர்மாறாக, நாம் பிரியாணி மற்றும் பீட்சா சாப்பிடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழர் வணிகர்கள் சிலர் நியாயமான விலைகளில் வியாபாரம் செய்யாமல், அதிக லாப நோக்குடன் செயல்படுவதால், மக்கள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளிடம் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது எந்த சமூகத்திலும் நடைபெறும் இயல்பான செயலாகும்.

மேலும், யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரம், உணவு வியாபாரம், இறைச்சி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்கள் முஸ்லிம் சமூகத்திடம் மாறிவிட்டது. தமிழ் வணிகர்கள் இணைந்து செயல்படாமை, குறுகிய லாப நோக்கத்துடன் செயல்படுதல் போன்ற காரணங்களால், தமிழர்களுக்குரிய வணிகங்கள் வேறுபட்ட சமூகத்தவர்களிடம் சென்றுள்ளன.

இதற்கு காரணம், போர் முடிந்த பிறகு தமிழர்கள் பாரிய முதலீடுகளை செய்யாததே. அதன் இடத்தை மற்றவர்கள் நிரப்பி, லாபம் ஈட்டி வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி இன அழிவின் ஓர் அங்கமாகும். பொருளாதார ரீதியாக பலவீனமான மக்கள் எளிதாக ஒடுக்கப்பட்டுவிடுவர். ஆகவே, நாம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

நன்றி,
மதுசுதன்
01.03.2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img