பிரித்தானியாவில் இருந்து அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடுகடத்த அனுமதிக்கும் சட்ட மாற்றங்களை கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சட்ட மசோதா மற்றும் முக்கிய அம்சங்கள்
நடப்பு பிரித்தானிய சட்டத்தின்படி, 12 மாத சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை பெற்ற வெளிநாட்டு குற்றவாளிகள் நாடுகடத்தப்படலாம். ஆனால், அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்தும் வகையில் புதிய திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என கன்சர்வேடிவ் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சம், குற்றவாளிகள் உட்பட தனிநபர்களை திரும்ப அழைத்துச் செல்ல மறுக்கும் நாடுகளின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக உள்ளது.
Shadow Home செயலாளர் கருத்து
Shadow Home செயலாளர் கிறிஸ் பில்ப் இதுகுறித்து கூறுகையில்:
- “வெளிநாட்டு குற்றவாளிகளை நாடுகடத்த கன்சர்வேடிவ்கள் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருக்கிறார்கள்.”
- “ஒரு வெளிநாட்டு குடிமகன் பிரித்தானியாவில் குற்றம் செய்தால், அவர்களை வெளியேற்ற வேண்டும்.
- “முடிவற்ற மேல்முறையீடுகளையும், சட்டப்போராட்டங்களையும் அனுமதிக்க முடியாது. ஆபத்தான குற்றவாளிகளிலிருந்து பிரித்தானிய குடிமக்களை பாதுகாக்க அரசு கடமைப்பட்டிருக்கிறது.”
மேலும், ஒரு நாடு தன் குடிமக்களை திரும்பப் பெற மறுத்தால், அந்த நாட்டின் குடிமக்களுக்கு புதிய விசா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.
104,000 வெளிநாட்டினருக்கு தண்டனை
பிரித்தானிய எல்லை பாதுகாப்பு மையத்தின் தரவின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 104,000 வெளிநாட்டினர் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்றுள்ளனர்.
தற்போதைய சட்டத்தின் கீழ், மனித உரிமை சட்டங்களை முன்னிட்டு நாடுகடத்தலுக்கு எதிராக மேல்முறையீடுகள் செய்ய முடியும். புதிய திருத்த மசோதா அமலுக்கு வந்தால், இந்த சட்ட சவால்கள் குறைந்து, பிரித்தானிய உள்நாட்டு சட்டம் மட்டுமே இப்படியான வழக்குகளில் பயன்படுத்தப்படும்.
இந்த புதிய மசோதா பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்த முக்கியமான தீர்வாக அமையும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.