தோட்டத்தில் சத்தமாக இயந்திரங்களை பயன்படுத்தி புல் வெட்டியா காரணத்தால் குறியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த 50 வயது பிரான்ஸ் நாட்டவரின் குடியுரிமை விண்ணப்பம், சத்தமாக புல் வெட்டியதாகவும், சுவிஸ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும் கூறி நிராகரிக்கப்பட்டது.
அந்த நபர் வார இறுதி நாட்களில் தோட்டத்தில் இயந்திரம் மூலம் புல் வெட்டுவதால் அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரது வீடு நீண்டநாளாகப் புதுப்பிப்பில் இருப்பதாலும், சுற்றிலும் குப்பைகள் குவிவதாலும் அவர் ஒரு “நல்ல குடிமகன்” இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் தேவையான மொழிப் பயன்பாடு மற்றும் குடியுரிமைக்கான பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார் என உறுதிப்படுத்தி, அவரது குடியுரிமை விண்ணப்ப நிராகரிப்பை ரத்து செய்தது.
இருப்பினும், அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறான செயற்பாடுகள் குறித்து அவர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இனி சத்தம் குறைந்த முறையில் தோட்டப்பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி, அவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.