விலைவாசி அதிகரிப்பால் பலரும் சிரமம் அனுபவிக்கிற இந்த நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றும் மக்களுக்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, கனடா அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் முடிவை அறிவித்து, அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக பணி செய்பவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை இல்லை எனினும் வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது.
ஊதிய உயர்வு எப்போது? யாரெல்லாம் பயனடைவார்கள்?
ஏப்ரல் 1, 2025 முதல், கனடா அரசின் ஒழுங்குப்படுத்தப்பட்ட (Federally regulated) தனியார் துறைகளில் பணி செய்பவர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்திற்கு 17.30 கனேடிய டொலர்களிலிருந்து 17.75 கனேடிய டொலர்களாக உயர்கிறது.
இந்த உயர்வு அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, கல்விக்காக கனடாவை நாடிய இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது.
இலங்கை மதிப்பில் மாற்றுகையில்:
வெளிநாட்டில் நிரந்தர வேலையோ அல்லது தற்காலிக வேலையோ எதுவானாலும் பெரும்பாலும் தங்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் வழக்கம் உண்டு இந்த ஊதிய உயர்வானது மக்களுக்கு இந்த விடயத்தில் பேருதவியாக இருக்கும்.
தற்போதைய நாணய மாற்று விகிதத்தின்படி (CAD 1 = LKR ~208.85 என கணக்கிட்டால்):
முந்தைய குறைந்தபட்ச ஊதியம் (17.30 CAD) → ரூ. 3,608.27
புதிய ஊதியம் (17.75 CAD) → ரூ. 3,702.13
ஏன் இந்த உயர்வு?
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்துவருகிறது. உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால், குறைந்த வருமானத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் பின்தங்குவதை தவிர்க்கும் நோக்கில், இவ்வாறு ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள்:
👉மாணவர்கள் ஓய்வு நேரத்தில் செய்யும் பணி மூலமாக கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு.
👉தொழிலாளர்கள் நிதிநிலை மேம்படுத்திக்கொள்ள அனுகூலம்.
👉பிற மாநிலங்களிலும் அதனை பின்பற்றும் முயற்சிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பது சிறு மாற்றமாகத் தோன்றினாலும், பலர் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பணியாளர்கள் அனைவரும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி நலமாக வாழ்வதை நோக்கமாகக் கொண்டதே அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை.