சிறுவன் Emile கொலை: தாய் வழி தாத்தா, பாட்டி உட்பட நால்வர் கைது.
கடந்த 08 யூலை 2023 அன்று, Haut-Vernet (Alpes-de-Haute-Provence) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் தாய் வழி தாத்தா, பாட்டியுடன் விடுமுறையை கழிக்கச் சென்றிருந்த இரண்டு வயதான Emile என்னும் சிறுவன் காணாமல் போனான்.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் நீண்டகால தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்ட உலங்குவானூர்திகள், மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற படைவீரர்கள்,
பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் என பெரும் அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சிறுவன் தொடர்பான எந்த தடயமும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில், 2024 மார்ச் மாதம், Emile காணாமல் போன கிராமத்திலிருந்து 1.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர்,
ஒரு சிறுவனின் மண்டை ஓட்டையும் அவனுடைய எலும்புகளையும் கண்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டன.
சமீபத்திய தகவல்களின் படி, இன்றைய தினம் Emile-னுடைய தாய் வழி தாத்தா, பாட்டி, அவர்களின் மகன் மற்றும் மருமகள் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் செய்தல் மற்றும் அதனை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாத்தா பாட்டி வசித்த வீடு காவல்துறையால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் புதிய தகவல்கள் வெளிவருவதற்காக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.