இயற்கை அனர்த்தங்களுக்காக காப்பீடு வழங்கும் தொகை கடந்த 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளதாக பிரெஞ்சு காப்புறுதிகளுக்கான கூட்டுத்தாபனம் (FFA) அறிவித்துள்ளது.
உலகளாவிய சூழலியல் மாற்றங்கள் மற்றும் காலநிலையின் சீரற்ற தன்மையால், இயற்கை அனர்த்தங்களின் தாக்கம் அதிகரித்து வருவதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் ஆலங்கட்டி மழை, இடி மின்னல் தாக்குதல்கள், வெள்ளம், பனிப்பொழிவு போன்ற பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட காப்புறுதிகளின் மொத்தம் €5 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது.
அதேவேளையில், 2020 முதல் 2023 வரை பதிவான சராசரி தொகை €5.6 பில்லியன் யூரோக்கள் என்பதால், 2024ஆம் ஆண்டின் தொகை சிறிதளவு குறைவாகவே உள்ளது.
சிறப்பாக, புயல் மற்றும் பனிப்பொழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கான காப்புறுதித்தொகை €2.2 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது.
இது, நாட்டில் அவ்வப்போது நிகழக்கூடிய பெரும் சேதங்களின் அளவினை வெளிப்படுத்துகின்றது.
1982 முதல் 1989 வரை சராசரியாக இந்த தொகை €1.5 பில்லியன் யூரோக்களாக மட்டுமே இருந்தது.
கடந்த மூன்று தசாப்தங்களில் இயற்கை அனர்த்தங்களின் அதிர்வுகள் அதிகரித்துள்ளதை இந்த விகிதங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இயற்கை அனர்த்தங்களின் அளவுகோல் அதிகரித்து வருவதால், காப்புறுதிகள் வழங்கும் நிறுவனங்கள் தங்களது கொள்கைகளையும்,
கட்டணத் திட்டங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நிலைகள் குறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், பிரெஞ்சு அரசாங்கம், விவசாயிகள், வீடு மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு மேல்
அழுத்தத்தை குறைப்பதற்காக, காப்புறுதித் திட்டங்களின் அணுகுமுறையில் மாற்றங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்கால இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.