பிரான்ஸின் தலைநகரமான பரிஸில், சமீப காலங்களில் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, நகர போக்குவரத்து அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மக்களின் பேருந்துகள் மீததான விருப்பம் குறைவடைந்தமைக்கான காரணங்கள் என்ன?
பரிஸில் தற்போது பேருந்துகள் மணிக்கு சராசரியாக வெறும் 10 கி.மீ வேகத்தில்தான் இயங்குகின்றன. நகரத்தின் வலையமைப்பும், போக்குவரத்து நெரிசலும் இந்த நிலையை உருவாக்கியுள்ளன. இதனால், மக்கள் மெற்றோ ரயில்கள் மற்றும் ட்ராம் வழித்தடங்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த போக்குவரத்து முறைகள் வேகமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.
மேலும், பரிஸ் நகராட்சி நகரம் முழுவதும் சைக்கிள் பாதைகள் (bike lanes) அமைத்து, மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவித்து வருகிறது. இது, இளம் தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலர் தற்போது மிதிவண்டிகளை தேர்வு செய்வதன் மூலம், தங்கள் பயண நேரத்தை திட்டமிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தெரிவுசெய்கின்றனர்.
பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் சுகாதார ரீதியிலான குறைபாடுகள்.
பெரும்பாலான பயணிகள், குறிப்பாக பெண்கள், இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிக்காமல் இருக்கக் காரணம் – பேருந்துகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் என்று பலர் கூறுகிறார்கள். சிலர் பேருந்துகள் சுத்தமாக இல்லை என்றும், வீட்டிற்கு செல்லும் போது பயமாக இருக்கிறது என்றும் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
RATP நிறுவனத்துக்கு சவால்
பரிஸ் நகர போக்குவரத்திற்குப் பொறுப்பான RATP (Régie Autonome des Transports Parisiens) நிறுவனம், 2024ம் ஆண்டில் மட்டும் 37 பேருந்து வழிகளை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. பயணிகளின் பயன்பாடு குறைவாகக் காணப்பட்டமையால், சில பாதைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆட்சிப் பொறுப்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் ஒரு புதிய போக்குவரத்து திட்டம் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் நகர போக்குவரத்தின் எதிர்காலம்?
பரிஸ் நகரம் தற்போது “பசுமை நகரம்” என்ற திட்டத்தின் கீழ், நகருக்குள் கார்களின் பாவனையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், மிதிவண்டி மற்றும் நடைபயணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இது, பேருந்து சேவைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் பார்க்கப்படுகிறது.