காமம், கலவி இந்த சொற்களை நாம் பயன்படுத்துவதற்கே நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அது தவறான விடயம் அல்லவா? ஆம் என்றுதான் பலரும் கூறுவார்கள். ஏனடா அப்படி? என்று வினவினால். சிலர் இது வெளியில் பேசுவதற்கான ஒன்றில்லை, அது ஒரு தவறான விடயம் என்று பேசி கேள்விப்பட்டுள்ளேன். காமம் தவறான விடயமென்றால் பூமியிலுள்ள அனைத்துமே தவறான ஒன்றாகவே போய்விடும். ஏன் கண்கண்ட தெய்வங்கள் என்று சொல்லும் பெற்றோரும் உட்பட.
காமம் என்பது புதிதாக எங்கோ இருந்து குதித்து நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று அல்ல. அனைவரிடமும் ஒன்றிணைக்கப்பட்டு காணப்படும் ஒரு வகையான உணர்வுதான். நமக்கு கோபம், மகிழ்ச்சி, துக்கம், வியப்பு என்பவை எவ்வாறு உருவாகின்றதோ அதே போன்ற உணர்வு தான் காமமும். இது நம்மில் பலருக்கு தெரிவதில்லையோ ஒருவேளை தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறோ எனக்கு தெரியவில்லை.
பொதுவாக காமம் பற்றி வெளியில் பேசினால் நீ எல்லாம் என்ன மனிதர்? என்றும், அதுவும் பெண்கள் பேசினால் நீ எல்லாம் ஒரு பெண்ணா? பெண்ணாக இருந்துவிட்டு இப்படி கதைக்கின்றாயே? என்ற கேள்விகள் தான் எழுப்பப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன் எனது அம்மாவிடம் நான் ஒரு புத்தகம் வாங்க போகின்றேன். அது முழுவதும் காமம், கலவி பற்றிய ஒரு விழிப்புணர்வூட்டும் புத்தகம் என கூறியபோது, எனது அம்மா என்னை ஒரு விசித்திரமான கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டு இப்போது உனக்கு இவையெல்லாம் தேவைதானா? என்று கேட்டார். ஏன் நீங்கள் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் காமம் என்ற ஒரு சொல் காதில் படும்படி கேட்டு பாருங்களேன் புரியும்? இதன் பின் உங்கள் வீட்டில் சோறு தரமாட்டார்கள் என்றால் நான் பொறுப்பல்ல.
இதிலிருந்து தான் விளங்கியது எல்லாமே தொன்று தொட்டு மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே நாம் அதைப்பற்றி கதைப்பதற்கு தயங்குகின்றோம். ஆனால் ஒன்று எனது அம்மாவின் பதில் தான் என்னவோ எப்படியாவது வாங்கி படிக்கத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது என்று சொல்லலாம். ஒரு விடயத்தை செய்யாதே என்றால் அதை செய்து பார்ப்பதில் நான் கெட்டிக்காரி. இப்படி சமீபத்தில் அம்மாவிடமும் திட்டு வாங்கி வாசித்த புத்தகம் தான் லதாவினுடைய கழிவறை இருக்கை. உண்மையில் சொல்லப்போனால் காமம், கலவி என்பது பற்றிய விழிப்புணர்வு ஊட்டிய பதிப்பு என்றே சொல்லலாம்.
ஒரு பொருளை நாம் காலம் காலமாக ஒரு துணியால் கட்டி வைத்தோமானால் அதற்குள் என்ன உள்ளது என்ற ஆவல் எல்லோருக்கும் உடையதாகத்தான் இருக்கும், அதோடு சேர்ந்து அது வெளியில் சொல்லமுடியாத ஒன்று என்றும் மனத்திற்குள் பதிந்ததொன்றாக இருக்கும் . அப்படியாக இந்த சமூகத்தில் பார்க்கப்படும் காமத்தை லதா அவர்கள் எழுத்துருவம் கொடுத்தது சிறப்பாக காணப்படுகின்றது.
ஒரு மனிதனது அடிப்படை தேவைகள் எதுவென வினவினால் உணவு , உடை , உறையுள் என்று கூறுவதே வழக்கம். அதோடு சேர்ந்து ஆதி காலத்திலிருந்தே ஒரு மனிதனுக்கு காமம் என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இதை இல்லை என்று ஒருவரால் கூட கூறவியலாது.
சமூகத்தில் காமம் பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான் பலவாறான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் பார்த்து ஒருவர் வெளியில் வெளிப்படையாக பேசினால் அவரை இழிவாக கூறுவது என்று எமது சமூகம் காணப்படுகின்றது.
இக்காலத்தில் குடும்ப வாழ்கை என்று வரும் போது புதிதாக திருமணமானவர்கள் விவாகரத்து என்று நிற்பதற்கு கூடுதலாக இந்த காமம் என்பதன் விளக்கமின்மையே காரணமாக இருக்கின்றது. இங்கு அனைவருக்குமே முறையான பாலியல் கல்வி என்பது கிடைப்பதே இல்லை. அதை கற்பிப்பதால் சமூகம் சீர்குலைந்து விடுமென்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை. இப்போது சீர்குலைந்திருக்கும் சமூகம் போல இருந்திருக்காது கற்பித்திருந்தால் என்று நான் நினைக்கின்றேன். பாலியல் கல்வியை முறையாக கற்றுக்கொள்ளவோ கற்பிக்கவோ யாரும் முனைவதில்லை. ஒரு புத்தகம் தான் அதை சிறப்புற விளக்கினாலும் அதை வாங்கி அறிவதற்கும் முனைவதில்லை.
இப்படி நிலவும் செயல்களாலேயே காமம் என்றால் இதில் என்னடா அப்படி இருக்கின்றது? என்ற ஆர்வம் இதனாலேயே உருவாகியிருக்க கூடும். இதுவே முறையாகக் கற்பிக்கப்பட்டிருந்தால் அட இதில் இவ்வளவுதானா என்றுவிட்டு காமம், கலவி என்பவற்றை பெரிதாக எண்ண வேண்டிய தேவை இருந்திருக்காதோ என்னவோ!
நாம் அனைவருமே சமுகதோடு ஒன்றிணைக்கப்பட்டு காணப்படுகின்றோம். ஆணோ பெண்ணோ எவராயினும் ஏதோ ஒரு வகையில் பாலியல் தொல்லைக்கு உட்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். இதற்கெல்லாம் காரணம் யாரென்று யோசியுங்கள்? சிறு பிள்ளைக்கு கூட காமம் பற்றிய புரிதலை உண்டாக்குங்கள். அனைவரும் இதை பற்றி முழுமையாக அறிந்திருக்க லதா அவர்களின் கழிவறை இருக்கை கண்டிப்பாக உதவக்கூடிய ஒரு புத்தகமாக காணப்படுகின்றது.
ஒரு மனிதனுக்கு அடிப்படை ஒரு குடும்பம். குடும்ப வாழ்க்கை சந்தோஷம் மிக்கதாகயிருப்பதத்திற்கு என்ன தேவை, காமம் பற்றிய அறிவின்மையால் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோமென்றும், ஒரு ஆண் பெண் இருவரினதும் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்றும் தெளிவான முறையில் லதா எடுத்துரைத்துள்ளார். அவரது கேள்விகள், சிந்தனைகள் என்பன கருத்துடைய ஒன்றாகவே அமைந்துள்ளது.
உலகத்திலுள்ள அனைத்து உயிரினத்திற்கும் முக்கியமான ஒன்றை பற்றி பேசுவதற்கு பெற்றோரோ சரி பெரியவர்களோ சரி தயங்கி நிற்க வேண்டாம். தயங்கியபடியால் தான் நமது சமூகம் இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இதன் பிறகும் காமம் பற்றி விழிப்புணர்வூட்ட தயங்குபவர் என்றால் நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை விமர்சித்து எந்த ஒரு பயனுமே இல்லை என்றே சொல்லுவேன்.
நன்றி.
10000% correct nee sonathu namma ellarume josika kudiya visayam and enoda students ku nan ithe solli kudukanum endu ninikiran thank you kannama ❤
Thangachi ma unnoda writing ku naan rasikan.Nee published pannina 3 article yum vasichen.3 article um vasika vaichathu unnoda 1st article.Unnada nalla talent irruku da.Keep it up.I am waiting for the nxt article.