Materialists (2025) – ஆணுக்கு இருக்கும் பெண்ணைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், பெண்ணுக்கு இருக்கும் ஆண் பற்றிய எதிர்பார்ப்புகளும் சாலப்பொருந்தி வருவதால் மட்டுமே இருவர் மிகச் சரியான ஜோடிகள் ஆகிவிட முடியுமா?
நம்மூர் திருமணத் தகவல் மையம் போல ஆண்களையும் பெண்களையும் நேரில் சந்திக்க வைப்பதற்கு ஒரு நிறுவனம் செயல்படுகிறது அதில் வேலை பார்க்கிறாள் நாயகி. தங்களிடம் பதிவு செய்து வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு Dating செல்ல இணை தேர்ந்தெடுத்துக் கொடுப்பது இவர்கள் பணி, அப்படி Dating சென்ற ஒத்துவந்தால் அது காதலாகவோ கல்யாணத்தை நோக்கியோ செல்லும்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஓர் அமெரிக்கக் கலாச்சாரத் திரைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனா அல்லது இந்தியக் கலாச்சாரமா என்று சந்தேகம் கொள்ளுமளவு திருமண விசயத்தில் இரண்டு கலாச்சாரங்களும் அநேக ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.உலகம் முழுக்கவே காதலிக்கப் படுவதற்கு எல்லோருமே ஏங்கிக் கிடக்கிறார்கள். அப்படியொரு காதலை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். இன்ன இன்ன மாதிரியான தகுதிகள் இருந்தால் அவர்களோடு பழகுவேன் காதலிப்பேன் என்கிற வரையறைகள் தோற்றுப் போகும்போது திகைக்கிறார்கள்.
வசதி குறைவாக இருக்கிறான் என்பதற்காக காதலனை விட்டுப் பிரிந்து, அவள் ஆசைப்படும் வாழ்க்கையை ஒரு பெரும் செல்வந்தனால் மட்டுமே தரமுடியும் என்கிற முடிவுக்கு வருகிறாள். அதே போல ஒரு பெரும் செல்வந்தன் அவளைக் கண்டு மையலுற்று பேசிப் பழகி இருவரும் மனமொத்து இணைந்து வாழ்வதாக முடிவெடுக்கிறார்கள். ஒரு நிலையில் இது எல்லாமே ஜோடனை இது எல்லாமே நீயும் நானும் திட்டமிட்டு நடத்திக்கொள்ளும் நாடகம்தானே தவிர இதில் காதல் இல்லை என்று சொல்வாள். அதற்கு செல்வந்தன் அதிருப்தி ஆகி “நான் முட்டாளாகி விட்டேன், எனக்கு ஏற்ற ஒருவளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்து,. அவளைக் கண்டுபிடித்து, பேசிப் பழகி, சேர்ந்து வாழ திட்டமிட்டு இறுதியில் எல்லாம் பாழாகிப் போவது எவ்வளவு துயரம் தெரியுமா?” என்று அரற்றிக் கொண்டிருப்பவனின் முதுகில் கைவைத்து. – நீ ஒருவரை காதலிக்கும் போது இந்த மாதிரி ஆகாது, இவ்வளவு அதிருப்தி ஆகமாட்டாய், ஒருவரைக் காதலிக்க வைக்க இவ்வளவு மெனக்கெடல் தேவையில்லை, அது மிக மிக எளிதான ஒன்று. எளிதாக்குவதற்கு மனமெல்லாம் காதல் வேண்டும். என்பாள். மிக அழகான காட்சி அது.
பொதுவாகவே யாருக்கெல்லாம் எளிதில் காதல் சாத்தியமாகும் என ஒரு தவறான கற்பிதம் எல்லோர் மனதிலும் உண்டு, அதில் வசதி படைத்த, அழகில் சிறந்த, திறமை வாய்ந்த என்பவை அடங்கும். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்களையும் ஒரு காதல் நீங்கிச் செல்லத்தான் செய்கிறது. மற்றனைவரைக் காட்டிலும் இவர்கள் அதிகமாகவே உடைகிறார்கள். எல்லாமே என்னிடம் இருக்கிறது ஆனாலும் ஏன் காதல் நிலைக்கவில்லை என்ற கேள்வியில் புழுங்கிப் போவார்கள். இனி உன் பார்வைக்கு நான் அழகாகத் தெரியமாட்டேன், என் சிறப்புத்தன்மை எதுவுமே உன்னை என்னிடம் ஈர்க்காது. எனில் இந்த உலகம் காதலுக்கு வகுத்த எல்லாமே பொய்.
ஒரு காதலை எந்த மெனக்கெடல்களாலும் உண்டாக்கி விடமுடியாது என்பதுதான் காதலின் அதிசயத்தன்மைக்குக் காரணம்.
சிரிக்கச் சிரிக்கப் பேசுவதால், அறிவின் விஸ்தீரணத்தைக் காட்டுவதால, மணிக்கணக்காக நேரம் ஒதுக்குவதால் எல்லாம் ஒருவரை நாம் entertain செய்யலாமே தவிர காதலிக்க வைக்க முடியாது.
காதல் வேறு எதனாலோ பூக்கிறது. ஏன் என்பதற்கான காரணம் எவரிடமும் இல்லை. பணம், அழகு, திறமை, அக்கறை, அன்பு, கரிசனம், என எதன் கையிலும் காதலைத் திறந்து போடும் சாவி இல்லை. மாயம் போல நிகழ்கிறது. எளிய சொற்களைப் பிடித்தபடி வளர்கிறது, சாதாரண செயல்களை, சாதாரண பாவனைகளை, சாதாரண உடல்மொழியை, அதிசயித்துப் பார்த்து ரசிக்கிறது. இதிலென்ன பிரம்மாதம் இருக்கிறது என்பவற்றைத் தலைமேல் தூக்கிக் கொண்டாடுகிறது.காமம் மலிந்து கிடைக்கும்,
உயிரை நிகராய்க் கேட்கும் காதல் அப்படியல்ல
அது அரிது.Materialists திரைப்படம் அப்படி நிறைய பேசுகிறது.
Barfi திரைப்படத்தில் செவித்திறன் மற்றும் பேசும் திறன் அற்ற ஒருவனை மகள் காதலிக்கிறாள் என்பதை அறிந்து மகளுக்கு வாழ்வின் பொருள் உணர்த்த, தாய் ஒரு மரம் வெட்டும் காட்டுக்குள் மகளைக் கூட்டி வந்து அங்கு மரம் வெட்டிக் கொண்டிருக்கும் ஒருவனைக் காண்பிப்பாள், அவன் தான் நான் காதலித்தவன். அவனையே திருமணம் செய்து இருந்தால் இன்றைய பகட்டான வாழ்வு கிடைத்திருக்காது, நான் அன்று அவனைப் பிரிவதாக எடுத்த முடிவுதான் நல்ல முடிவு, அது போலத்தான் நீயும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வாள். மகள் சொல்வாள், “நீ எடுத்த முடிவுதான் நல்ல முடிவு என்றால் ஏன் அடிக்கடி அவரை வந்து வந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்?. இன்னும் ஏன் அவரை மறக்காமல் இருக்கிறாய்?. காதல் நீ நினைப்பது போல அல்ல அம்மா, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வது போல என்னை நான் ஏமாற்றிக் கொள்ள முடியாது”