பாரிய சைபர் தாக்குதல், மின் துண்டிப்பு, இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகக் குறிப்பிட்ட அளவு திரவப் பணத்தை வீட்டில் சேமித்து வைத்திருங்கள். ஒராளுக்குக் குறைந்தது எழுபது முதல் நூறு ஈரோக்களையாவது கையில் தயாராக வைத்திருங்கள்.
“அமைதியாக இருங்கள், பணத்தை வைத்திருங்கள் (“Keep calm and keep cash) என்ற தலைப்பில் ஐரோப்பிய மத்திய வங்கி அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற குறிப்பு ஒன்றில் இவ்வாறு அதன் ஐரோப்பியக் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஸ்பெயினில் ஏற்பட்ட பெரிய அளவிலான மின் தடை போன்ற நிலைமைகள் , பாரிய சைபர் தாக்குதல்கள், பெரும் தொற்று நோய் போன்ற நெருக்கடிகள் மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படுத்தக் கூடிய குழப்பங்கள், தடைகளில் இருந்து பதற்றமின்றி மிக இலகுவாகத் தற்காத்துக் கொள்ள இந்தப் பணச் சேமிப்பு முறை உதவும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து, ஒஸ்ரியா, பின்லாந்து ஆகிய நாடுகளைப் போன்று ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்களது குடிமக்களைக் குறைந்தது 72 மணிநேரத்துக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அளவிலான பணத் தொகையைச் சேமித்து வைத்திருக்க ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி சிபாரிசு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற முக்கிய மையங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. வங்கிகள் மற்றும் மின்னணுப் பணப்பரிமாற்ற இயந்திர வைப்பின்னல்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது.உக்ரைன் போரின் பின்னணியுடன் தொடர்புடைய இது போன்ற நாசச் செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உஷாரடைந்துள்ளன.
கருத்து : இவர்கள் வேறு ஏதோ திட்டம் ஒன்றுக்காக மக்களை தயார்படுத்துகிறார்கள்..எந்த அரசும் நேரடியாக என்ன நடக்குது என்பதை மக்களுக்கு சொல்லமாட்டார்கள்,சுற்றி வளைத்துதான் சொல்லுவார்கள். வரும் காலங்களில் மிகபெரும் போர் அழிவுகளுக்குரிய வாய்ப்புக்கள் இருக்கும் என்பதைதான் சொல்லாமல் சொல்ல வருகிறார்கள். நாம் பாரிசில் இருப்பதால் அப்படி ஒன்றும் நடக்காது , நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைப்போம்,ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டிய தேவையில்லை. தவிர அப்படி நடக்கும் போது நம்மால் நினைத்து பார்க்க முடியாதளவு கொடூரமாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.