சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பரிந்துரையின் முக்கிய நோக்கம் அதிக வருமானம் பெறும் மக்களுக்கான காப்பீட்டுத் தொகையை குறைத்து, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தற்போதைய நிலையை மாற்றாமல் தொடர்வதாகும். இதன் மூலம், ஒருபுறம் சமூக நீதி பேணப்படுவதோடு, மற்றொரு புறம் அரசு செலவுகளில் முக்கியமான ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, €265.4 பில்லியன் யூரோக்கள் சமூக பாதுகாப்பு காப்பீட்டு செலவாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட அதிகமாகும். இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, €40 பில்லியன் யூரோ செலவைக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன் வைத்துள்ள நிலையில், இந்த புதிய பரிந்துரை ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வருமான அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை வகுப்பது நடைமுறைப்படுத்தும் போது என்னவெல்லாம் சவால்கள் எதிர்நோக்கும் என்பதை அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. வருமானத்தை எவ்வாறு மதிப்பீடு செய்யும், எந்த வருமான வரம்புகளில் எந்த அளவு தொகை விதிக்கப்படும் என்பது போன்ற விவரங்கள் குறித்து தெளிவான வரையறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வரி செலுத்தும் மக்களிடம் மற்றும் சமூக பாதுகாப்பு முறைமையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமூக-பொருளாதார நடவடிக்கையாக இருக்கும் என்பது உறுதி.