ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென ஒரு முக்கிய தீர்வை வழங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள், கணினி சிப்கள் மற்றும் பிளாட்ஸ்கிரீன் திரைகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு தற்போது அமெரிக்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்டன. விலக்குகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அமலில் வந்துள்ளன. இவை, ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 125% சீனாவுக்கு எதிரான வரி, மற்றும் உலகளாவிய 10% அடிப்படை வரி ஆகியவற்றிலிருந்து குறித்த தயாரிப்புகளை விலக்குகின்றன.
ஆப்பிள் மற்றும் என்விடியாவுக்கு நேரடியான பலன்
இந்த நடவடிக்கையால், Apple Inc., Nvidia Corp. உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியான வரி விலக்கைப் பெற்றுள்ளன. அமெரிக்காவில் பெரும்பாலும் தயாரிக்கப்படாத இந்த மின்சாதனங்கள், உள்நாட்டுப் பயன்பாட்டில் பரவலாக இருப்பதால், நுகர்வோருக்கும் இது நற்செய்தியாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், வரிகள் உயரும் என்ற அச்சத்தில், ஐபோன் மற்றும் பிற சாதனங்களை மக்கள் திடீரென வாங்கத் தொடங்கினர். தற்போது அந்த விலை உயர்ச்சி பயம் தற்காலிகமாக குறைவடைந்துள்ளது.
வரி விலக்குகளின் பொருளாதார தாக்கம்
ராண்ட் சீனா ரிசர்ச் சென்டரின் துணை இயக்குநர் ஜெரார்ட் டிப்பிப்போ வழங்கிய தரவுகளின்படி, இந்த விலக்குகள் 2024ஆம் ஆண்டு அடிப்படையில் அமெரிக்கா இறக்குமதி செய்த $390 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை உள்ளடக்கியது. இதில் $101 பில்லியனுக்கும் மேற்பட்டவை சீனாவிலிருந்து.
வரி விலக்குகள் பெற்ற முக்கியமான பிரிவுகள்:
👉$41 பில்லியன் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள்
👉$36 பில்லியன் மதிப்புள்ள கணினிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள்
மொத்தத்தில், சீனாவிலிருந்து வரும் 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இறக்குமதியின் 22% இவை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.
இது அமெரிக்க வரிக் கட்டண திட்டத்திலிருந்து கிடைத்த ஒரு மிகப்பெரிய விடுதலையாகும். ஆப்பிள் போன்ற முக்கிய நிறுவனங்கள் மற்றும் மின்சாதனங்களை வாங்கும் நுகர்வோர்கள் விலை அதிகரிப்பிலிருந்து தப்பிக்கலாம், என டிப்பிப்போ தெரிவித்துள்ளார்.
ஆனால், பல பிற நுகர்வோர் மற்றும் முதலீட்டு பொருட்கள் இன்னும் உயர் வரிகளை எதிர்கொள்கின்றன. இந்த விலக்கு, அமெரிக்க பொருளாதாரத்தின் ஒரு பகுதியையே மட்டுமே காப்பாற்றுகிறது.
ட்ரம்ப் தலைமையிலான வரிக் கொள்கைகள், உலக சந்தைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பங்குச் சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தி, சீனாவுடன் தீவிரமான வர்த்தக யுத்தத்தை தூண்டின. இப்போது, இந்த விலக்கு நடவடிக்கை, ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் முக்கிய தளர்வாகக் கருதப்படுகிறது.