Peter Navarro என்ற நபர் சமீப காலங்களில் ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றவர்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் அவர்களின் முக்கிய பொருளாதார ஆலோசகராக பணியாற்றியதோடு, பல சர்ச்சைகளுக்குப் பின்னணியாக இருந்தவரும் இவரே.
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலின் போது, தனக்கு ஒரு பொருளாதார ஆலோசகர் தேவை என Donald Trump தனது மருமகனான Jared Kushner-க்கு தெரிவித்திருந்தார். அதனையடுத்து, Jared, Amazon தளத்தில் தேடலில் ஈடுபட்டார். அப்போது அவரது கவனத்திற்கு ‘Death by China’ என்ற நூல் கிடைத்தது. இதை எழுதியவர்களில் ஒருவராக இருந்த Peter Navarro மீது Jared கவனம் செலுத்தினார்.
Navarro, Harvard பல்கலைக்கழகத்தில் MBA மற்றும் PhD பட்டங்களைப் பெற்றவர் என்பதால், அவரை Trump-க்கு பொருத்தமான ஆலோசகராக Jared பரிந்துரைத்தார்.
Navarro எழுதிய புத்தகங்களில் “Ron Vara” என்ற நபரின் கருத்துக்கள் அடிக்கடி மேற்கோளாக வந்தன. ஆனால், பின்னர் Ron Vara என்பது உண்மையில் இல்லாத ஒரு கற்பனை நபரெனவும், Navarro தனது பெயரில் உள்ள எழுத்துகளை மாற்றி உருவாக்கிய உருவகப் பாத்திரமெனவும் தெரிய வந்தது. Harvard-ல் PhD பட்டம் பெற்ற ஒருவர் கற்பனை நபரின் வாயிலாக தமது கருத்துக்களை வலுவாக்க முயன்றது பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பியது.
Trump போன்று சீனாவிற்கு எதிரான வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த Navarro, அவரது நம்பிக்கைக்குரிய நெருங்கிய ஆலோசகராக மாறினார். Trump தனது முதல் ஆட்சி காலத்தில் Navarroவை வெள்ளை மாளிகையின் சர்வதேச வர்த்தகத் துறையின் பணிப்பாளராக நியமித்திருந்தார்.
இருப்பினும், Treasury செயலாளர் Steven Mnuchin மற்றும் தேசிய பொருளாதார சபையின் இயக்குனர் Gary Cohn ஆகியோர் அதிக செல்வாக்குடன் இருந்ததனால் Navarroவின் கொள்கைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
எனினும் 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி குறித்து சாட்சியமளிக்க மறுத்தமையால் இவர் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
Trump ஐ பாதுகாக்கும் முயற்சியல் தன்னை முன்னிலைப்படுத்தியதும் சீனாவிற்கு எதிரான Trump இன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தததும் அவரை Trump இன்நம்பிக்கைக்குரிய விசுவாசியாக மாற்றியுள்ளது.
Navarroவின் நம்பிக்கைகள் தெளிவானவை: சீனா எப்போதும் அமெரிக்காவுக்கு ஒரு நெருக்கடியான போட்டியாளர். சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு பொருளாதாரத்தில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகும். அமெரிக்கா உலக வல்லரசாக திகழவேண்டும் என்றால், பிற நாடுகளை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் Navarro நம்புகிறார்.
இந்த எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பு என்ற கொள்கையை அமெரிக்கா வகுத்தது. கடந்த 2ம் திகதி, இந்த திட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், உலகப் பொருளாதார ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. பங்குச் சந்தைகள் சரிந்தன.
Donald Trump-இன் தீவிர ஆதரவாளராக இருப்பவர் Elon Musk இந்த வரிவிதிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார். இதனால், Trump நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு தோன்றியது.
இந்த வரிவிதிப்புகள் காரணமாக Tesla நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் 49% விற்பனை இழந்தது. இதன் விளைவாக, அமெரிக்க அரசாங்கத்தில் இருந்து எழுந்த அழுத்தங்களால், Trump தனது வரிவிதிப்பு திட்டத்தை 90 நாட்கள் பின்வைக்க முடிவு செய்தார்.
Elon Musk இன் தலையீடு இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இத்தாலிய துணைப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே 0% வரி பரிமாற்றம் பற்றிய கருத்து எடுத்துக்கூறப்பட்டது.
Navarro, இந்த சிக்கல்களைப் பற்றி கருத்து வெளியிடும்போது, Elon Musk-ன் கருத்துகள் அவருக்கு ஆச்சரியத்தைத் தருவதாகவும், அவருக்கு வரிவிதிப்பு குறித்து புரிதல் இல்லையெனவும் விமர்சித்தார். இதனால், Trump-இன் நெருக்கமான இரு நபர்களுக்கு இடையில் முரண்பாடுகள் வெளிப்பட்டன.
இந்த வரிவிதிப்புகள் பல அமெரிக்க வர்த்தகர்களை பாதித்தன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125% வரி விதிக்கப்பட்டது. பதிலுக்கு, சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 84% வரி அறிவித்தது.
அமெரிக்காவின் இறக்குமதிகளில் 14% சீனாவிலிருந்து வருகிறது. ஆண்டுக்கு 440 பில்லியன் டொலருக்கு மேல் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மறுபுறம், சீனா 145 பில்லியன் டொலருக்கு மதிப்புடைய அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
சுமார் 440 மில்லியன் பன்றிகளுக்குத் தேவையான சோயா பருப்பு சீனாவிற்கு அமெரிக்காவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துடன், மரவளி, எரிபொருட்கள், மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல ஐபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்றன. இந்த வரிவிதிப்பு காரணமாக, ஐபோன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக Apple பங்குகள் 20% வரை வீழ்ச்சியடைந்தன.
உலகப் பொருளாதாரத்தில், அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து 43% பங்குகளை வைத்துள்ளன. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் உலகம் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு கொண்ட Peter Navarro, தமக்குக் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி உலக பொருளாதாரத்தை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளார்.
இப்போது, இந்த நெருக்கடியில் இருந்து உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது யார்?
“Death by China” என்ற நூல் இறுதியில் “Death of World Economy” ஆக மாறக்கூடுமா என்பதனை காலமே கூற வேண்டும்…