மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, இதில் மொத்தமாக 250,000 பேர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் தொழிற்சங்கங்களும், உடன் இணைந்தன. CGT, CFDT, CFE-CGC, FSU, Solidaires, Unsa போன்ற தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களை ஆதரித்தன.
பரிசில் Place de la République பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்பச் சூழலுக்குள் மறைந்திருக்கும் பாலியல் மற்றும் உடலியல் தொல்லைகள், தொழிலிடங்களில் உள்ள இலஞ்சச்சூழல் ஆகிய பிரச்சினைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் அரசாங்கத்திடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர், அவற்றில் முக்கியமானவை:
சம்பள சமநிலை – பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே வேலையின் கீழ் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் – குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்த வேண்டும்.
வேலை வாய்ப்பில் சமத்துவம் – மேலாண்மை பதவிகளில் பெண்களின் பங்கினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்தரித்தல் உரிமை – பெண்கள் தங்கள் உடலின்மீது முழுமையான உரிமை செலுத்த சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த ஆண்டு நடந்த பெண்கள் தின ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டை விட சிறப்பாக நடைபெற்றதாகவும், மக்களிடையே இதுபற்றி அதிக எதிரொலி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைக்கான இந்த தொடர்ச்சியான போராட்டம் சமத்துவமான சமூகத்திற்கான பாதையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.