பிரான்ஸின் தலைநகர் பரிஸை ஒட்டியுள்ள Seine-Saint-Denis மாவட்டம், தற்போது வெளிநாட்டவர்கள் அதிக அளவில் குடியேற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியதாக கருதப்படும் இம்மாவட்டம், இப்போது அதிகரித்த குடியேற்றம் மற்றும் அதன் விளைவுகளால் சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக பலர்
தெரிவிக்கின்றனர்.
Seine-Saint-Denis மாவட்டம், பிரான்ஸின் மிகவும் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பிராந்தியத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக வளங்களை விட அதிகமாக சட்டபூர்வமான குடியேற்றக் குழுக்கள், அகதிகள் மற்றும் சிறிய வருமானம் பெறும் குடும்பங்கள் வாழ்வதனால்தான் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வளங்களின் பற்றாக்குறையானது அங்கு வாழும் மக்களை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் குடியேற்றம் குறித்த விளைவுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. இதில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குடியேற்றவாசிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினரிடம் இருந்து சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் ஆவணம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை – அவர்களின் நாட்டு விபரம், அடையாள ஆவணங்கள், வதிவிடங்கள், மற்றும் குற்றத்தினைச் சார்ந்த பின்னணி தகவல்கள் உடனடியாக நகரசபைக்குத் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சமூகப்பலவீனங்கள் மற்றும் பாதுகாப்பு விவாதங்களை பொதுமக்களும், சமூக அமைப்புகளும் கவனித்து வருகின்றனர். சிலர், இது வெளிநாட்டவர்களின் மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் கண்டிக்கின்றனர். மற்றொருபுறம், சிலர் நாட்டு பாதுகாப்பிற்காக சீரான கண்காணிப்பு அவசியம் எனவும் வாதிடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள், எதிர்காலத்தில் வதிவிட அனுமதிகள் வழங்கப்படும் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தேவையை ஏற்படுத்துமா என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சரியான தகவல்களூடான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் குற்றவாளிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.