பாரிஸ்: சென் நதியில் தொடர்ந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்தாவது சடலம் Charenton-le-Pont (Val-de-Marne) பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில் நதிக்காவல்படையினர் Nelson Mandela பாலம் அருகே மிதந்து வந்த சடலத்தை கண்டதாக தகவல். பின்னர் அது Chemin de l’Ancienne Écluse பகுதியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவம் Choisy-le-Roi பகுதியில் முந்தைய நான்கு சடலங்கள் மீட்கப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தாலும், விசாரணையில் தற்போது குற்றச்செயல் தடயங்கள் ஏதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையாளர்கள் இது தற்கொலை அல்லது தவறுதலால் நிகழ்ந்த மரணம் என்று கருதுகின்றனர்.
ஆரம்பத் தகவலின்படி, இது “ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்” என்று கருதப்படுகிறது. பல நாட்களாக நீரில் இருந்ததால் உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால், அவரின் அடையாளத்தை உறுதி செய்வது கடினமாகியுள்ளது.
இச்சம்பவம், சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Choisy-le-Roi பகுதியில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள் தொடர்பான வழக்குக்குப் பின்பு நடைபெறுகிறது. அந்த வழக்கில் Monji H. எனப்படும் 20 வயதுடைய துனிசியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 24 அன்று குற்றம்சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அவர்மீது தொடருக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஐந்தாவது சடலத்துடன் தொடர்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Choisy-le-Roi வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.