2024 ஆம் ஆண்டில் பிரான்சின் சுகாதார காப்பீட்டு அமைப்பான l’Assurance Maladie-யில், ஏறக்குறைய €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள், போலியான மருந்துச்சீட்டுகள், தவறான மருத்துவ அறிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக செய்யப்பட்ட சிகிச்சைகள் மூலம் நடந்ததாக கூறப்படுகிறது.
மோசடியில் ஈடுபட்டவர்களில், மருத்துவர்கள், மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது, சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் வகையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த மோசடியின் அளவு 35% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில், €500 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டிருந்தது.
மோசடிகளை தடுக்கும் நோக்கில், 1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காப்பீட்டு அமைப்பில் பணியாற்றி வருகின்றனர்.
இருந்தாலும், புதிய வகையான மோசடிகள் அதிகரித்துள்ளதாலும், டிஜிட்டல் முறைகளின் தவறுகள் காரணமாகவும் இவை கட்டுப்படுத்தப்படுவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த மோசடிகளைத் தடுக்க, புதிய கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், பாரிய தகவல்தொடர்புகள் மற்றும் மருத்துவர்களுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களுக்கான நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பலப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
பிரான்சில் சுகாதாரக் காப்பீட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த இது போன்ற நடவடிக்கைகள் அவசியமாக கருதப்படுகிறது.
இவ்வளவு பெரிய இழப்பு, அந்நாட்டு சுகாதாரத் துறையின் எதிர்காலத்தில் விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பதே பலரின் கருத்தாகும்.