பிரான்ஸின் வடகிழக்கில் அமைந்துள்ள நகரமான Haute-Saône இல்
வீட்டுத் தோட்டத்தில கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய வேறு குற்றவாளிகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Haute-Saône மாவட்டத்தில் உள்ள Gray எனும் கிராமத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சார பாவனையின் அளவை கணிக்கும் மின் அளவீடு பெட்டிகளில் இடம்பெறும் மோசடிகளைக் கண்காணிக்கும் ஊழியர் ஒருவர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த வீட்டிலும் மோசடி இடம்பெறுகிறதா என அறியும் நோக்கில் அங்கு சென்றுள்ளார்.
பரிசோதனைகளை மேற்கொண்ட அவர் அந்த வீட்டில வழமைக்கு மாறாக அதீத மின்பாவனை இருப்பதை கண்டுபிடித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் வீட்டிற்குள் சென்று ஆராய்ந்த போது வீட்டிற்கு பின்னால் கஞ்சா தோட்டத்தை கண்டு பிடித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 200 சதுர மீற்றர் பரப்பளவில் 2,183 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு பெரும் தோட்டம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் அங்கிருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த கஞ்சா செடிகளை வேரோடு அழிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.