அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரி, மற்றும் பிற தொழில்துறை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10% வரிகள் மீது இந்த இடைநிறுத்தம் அமுலில் வந்துள்ளது.
இது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 10 ஆம் தேதி தனது X (twitter) தளத்தில் “இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. எனினும், இந்த இடைநிறுத்தம் ஒரு நிரந்தர தீர்வாக முடியாது மேலும் உறுதியற்ற நடவடிக்கையாக உள்ளது” என எச்சரித்துள்ளார்.
மேலும்
“இந்த இடைநிறுத்தத்தை ஒரு முன்னெச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும். ஐரோப்பா எப்போதும் பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வரி விதிப்புகள் காரணமாக, ஐரோப்பிய தொழில்துறைக்கு வருடத்திற்கு சுமார் 52 பில்லியன் யூரோ அளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இது வேலைவாய்ப்புகளுக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் மக்ரோன் மேலும் கூறியதாவது:
“இந்த வரிவிதிப்புகள் ஐரோப்பிய தொழிலாளர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. ஐரோப்பா வலிமையாக பதிலடி கொடுக்க வேண்டும். இந்த அனியாய வரிகளை முழுமையாக நீக்குவதே நியாயமான தீர்வாகும். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்காக உரையாடலுக்கு தயாராக உள்ளன.”
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தனது நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும். மேலும், இது அமெரிக்காவின் வர்த்தக பாதுகாப்பு (trade protectionism) நோக்கங்களை மீண்டும் விவாதிக்க ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
அளவீட்டற்ற வரிவிதிப்புகள் போன்ற நடவடிக்கைகள், உலக பொருளாதாரத்திலும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கக்கூடியதாகும். இந்த 90 நாள் இடைநிறுத்தத்தின் பின்னர் அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும், ஐரோப்பா எப்படி பதிலளிக்கப்போகிறது என்பதையும் உலகம் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது.