உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைவு ஏற்படலாம்” என கூறியுள்ளார். இது நுகர்வோருக்கு தற்காலிகமாக ஒரு நல்ல விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை $74 டொலர்களில் இருந்து $63 டொலர்களாக, சுமார் 15 சதவிகிதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைந்த விலை என குறிப்பிடப்படுகிறது.
இந்த விலை வீழ்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றாக, சர்வதேச அளவில் எண்ணையின் தேவை குறைவடைந்தமை, மற்றும் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான OPEC+ நாடுகள் சில உற்பத்தியை அதிகரித்திருக்கலாம் என்பதும் கூறப்படுகிறது.
பிரான்சில் எரிபொருள் விலைகள் குறைவதால், பொதுமக்கள் மட்டும் அல்லாமல் தொழில்துறைகளும் நன்மை பெறலாம். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் இதில் நேரடி லாபம் காணும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எரிபொருள் விலைகள் இவ்வாறு குறைவது சில மாதங்கள் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சந்தை நிலைமை தொடர்ந்து மாறக்கூடியதென்பதால், இதனை ஒரு நிரந்தர மாற்றமாக கருத முடியாது என்றும், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.