குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த பிரான்ஸ் அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள் – புதிய திட்டங்களை அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் அறிவிப்பு!
பாரீஸ், ஏப்ரல் 8, 2025:
பிரான்சில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2025 இற்குள் செயல்படுத்தப்படும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை Libération நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வௌட்ரின் கூறியபடி, இவரது திட்டங்களில் முக்கியமானது, பெற்றோர் வேலைவாய்ப்புகளைத் தவிர்க்காமல் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள். இதன் மூலம் குடும்பங்கள் மீது இருக்கும் மன அழுத்தத்தை குறைத்து, குழந்தைகளுக்கு உறுதியான வளர்ச்சி சூழலை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார்.
அத்துடன் ASE (l’aide sociale à l’enfance) எனப்படும் சமூக குழந்தைகள் நல சேவையில் சேரும் ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை முழுமையாக மதிப்பீடு செய்யும் திட்டத்தை அமைச்சகம் தீவிரமாக அமல்படுத்த உள்ளது. இத்தகைய மதிப்பீடு ஏற்கனவே சட்டப்பூர்வமாக இருந்தாலும், அது ஒழுங்காக நடைமுறையில் வராதது பற்றி அவர் கவலை தெரிவித்தார்.
இல்-து-பிரான்ஸ் மற்றும் ஹாட்ஸ்-து-பிரான்ஸ் ஆகிய பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு ஆதரவு மையங்கள், இதற்கான முன்னோடியாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குழந்தைகள் ASE மூலம் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன், உளவியல் மற்றும் உடலியல் நிலைமைகள் விரிவாக பரிசோதிக்கப்படும் என அமைச்சர் உறுதிமொழி அளித்துள்ளார்.
மேலும், பிரச்சனைகளில் உள்ள குழந்தைகளுக்காக 25 புதிய மருத்துவ வரவேற்பு அலகுகள் (unités d’accueil pédiatriques) உருவாக்கப்பட உள்ளது. இது அவசர சூழ்நிலைகளில் சிறுவர்களுக்கு விரைந்து மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் செயல்படும்.
2026ம் ஆண்டு முதல், பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்காக “ஒருங்கிணைந்த பராமரிப்பு பாதைகள்” எனப்படும் புதிய முறைமை இயல்பாக அமல்படுத்தப்படும். இதில், பல்வேறு அமைப்புகள் மத்தியிலான தகவல் பரிமாற்றம் மேம்படுத்தப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் இடையூறு இல்லாத, தொடர்ச்சியான பராமரிப்பு திட்டம் உறுதி செய்யப்படும்.
வளங்களின் பற்றாக்குறை மற்றும் பணியாளர்களின் தட்டுப்பாடு போன்ற சவால்கள் நிலவினும், அமைச்சர் எந்தவொரு நிதி விவரங்களையும் தற்போதைக்கு வெளியிடவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாத இறுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் சந்திப்பு ஒன்றை அவர் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு:
பிரான்ஸ் முழுவதும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் பல சமூக அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் வெறும் அறிவிப்பாக மட்டுமின்றி, நடைமுறையில் பலனளிக்க வேண்டும் எனக் கோருகின்றன. “ஒருங்கிணைந்த பராமரிப்பு”, “தகுந்த நிதி ஒதுக்கீடு”, மற்றும் “வல்லுநர் பணியாளர்களின் பயிற்சி” ஆகியவை இத்திட்டத்தின் வெற்றிக்கான முக்கியக் தேவைகளாக இருக்கும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.