Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 19 வயது இளைஞராவார் அவரது கழுத்தில் கத்தி பாய்ந்து காயம் ஏற்பட்ட நிலையிலேயே மரணம் சம்பவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. இக்குழு மோதலில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல மணி நேரமாக நடந்த இந்த மோதல், இடதுசாரி மற்றும் வலதுசாரி குரூப்புகளுக்கு இடையிலான பழி தீர்க்கும் தாக்குதலாக இருக்கலாம் எனத் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞனின் அடையாளம் தற்போது வெளியாகாத நிலையில், அவரது உடல் மொர்சுவருக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. மேலும் ஒருவருக்கு கத்திக்காயம் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் பின்னர் அந்த பிராந்தியத்திலுள்ள பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் சம்பவ இடத்திற்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகளின் மூலம் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
அரசுத்துறைகள் மற்றும் காவல் துறையினர், இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் குழுக்களால் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.