கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவது பாரிஸ் மற்றும் பாரிஸை அண்மித்த புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை குறைந்துள்ளதாக தெரிகிறது.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடந்த ஆறு மாதங்களில் குற்றச் செயல்களில் காணப்படும் சராசரி வீழ்ச்சி, பெரும்பாலான பகுதிகளில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
📉 குற்றச்செயல்களில் கணிசமான வீழ்ச்சி:
வீட்டு திருட்டுகள்:
பரிஸ் மற்றும் அதன் மூன்று முக்கிய புறநகர் மாவட்டங்கள் — Hauts-de-Seine, Seine-Saint-Denis, மற்றும் Val-de-Marne ஆகிய இடங்களில் வீடுகளில் நிகழும் திருட்டுகள் 21.6% வீழ்ச்சியடைந்துள்ளன. பாரிஸ் நாகர் என்ற ரீதியில் பொதுவாக நோக்கினால் இந்த வீதமானது 24.6% என மேலும் அதிகமாக உள்ளது.
பொது போக்குவரத்தில் நிகழும் குற்றங்கள்:
பொதுப்போக்குவரத்து (மெட்ரோ, பஸ்கள், ரயில்கள்) ஆகியவற்றில் பயணிகளை குறிவைத்து நடைபெறும் கொள்ளைகள், தாக்குதல்கள் போன்றவை 17.6% வீழ்ச்சியடைந்துள்ளன.
பயணிகளை தாக்காமல், சுலபமாக நடைபெறும் ‘பிக் பொக்கெட்’ திருட்டுகள் மற்றும் மோசடிகள் 32% வீழ்ச்சியடைந்துள்ளன.
தனித்தனியே ஒவ்வொரு புறநகர்களையும் நோக்கும் போது, பிக் பொக்கெட் திருட்டுகள் மட்டும் 14.6% குறைந்துள்ளன.
🔍 எதனால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
பரிஸ் காவல்துறை இந்த வீழ்ச்சிக்கு பின்புலமாக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்:
👉அதிக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவல்
👉காலடி காவல் தழுவல் (increased foot patrols)
👉அறிவுறுத்தும் பிரச்சாரங்கள் — பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு
👉பயணிகள் கூட்டமான இடங்களில் எச்சரிக்கை சுவரொட்டிகள் மற்றும் அறிவிப்புகள்
இதற்கு மேலதிகமாக, பரிஸ் நகரம் கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 120,000 கொள்ளை சம்பவங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி விபரமானது, தற்போதைய வீழ்ச்சியை மேலும் முக்கியத்துவம் அளிக்கும்படி செய்கிறது.
🛡️ பாதுகாப்பான பாரிஸ் நோக்கி…
குற்றச் செயல்கள் மீதான இந்த வீழ்ச்சியானது பாரிஸ் நகராட்சியும், அரசியல் நிர்வாகமும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளால் சாத்தியமாகியுள்ளன. இது, உலகின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றான பரிஸ் தனது பாதுகாப்பு நிலையை மேம்படுத்திக் கொண்டிருப்பதற்கான ஒரு வலுவான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
வல்லுநர்கள் இதை முன்கூட்டியத் திட்டமிடல், டிஜிட்டல் கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுதல் என்பவற்றின் ஒருமித்த வெற்றியாகப் பார்க்கிறார்கள்.