பிரான்ஸின் முக்கிய நகரங்களில் வாகன மாசுக்கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள “Crit’Air” வில்லைகள் தற்போது புதிய அரசியல் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த வில்லைகள் ஒவ்வொரு வாகனமும் சூழலுக்கு எவ்வளவு மாசு ஏற்படுத்தும் என்ற அளவைப் பொருத்து தரநிலைகளை வகுத்து, அந்த அடிப்படையில் நகரப்பகுதிகளில் வாகன நுழைவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
இதனால், குறிப்பாக பழைய மோட்டார் வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் பெருநகரங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இது, வேலை, கல்வி, சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே தடையாக உருவாகி இருப்பதைக் கவனித்த மரின் லூப்பனின் தேசிய பேரணிக் கட்சி (Rassemblement National – RN), Crit’Air வில்லைகளை முழுமையாக ரத்து செய்யும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தது.
இந்த கோரிக்கைக்கு தற்போது பல எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது. அதன் விளைவாக, இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8, 2025), பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கை தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற இருக்கின்றன.
இதைத் தவிர்க்கும் வகையில் மக்ரோன் தலைமையிலான Renaissance கட்சி இது ஒரு பின்னடைவாக அமையும் எனக்கூறுகிறது. மாசு கட்டுப்பாடுகளை நீக்குவது, உயர் மாசுத்தன்மை காரணமாக ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் எச்சரிக்கிறது.
இதனை மேலும் கடுமையாக்கும் வகையில், இன்று பரிசின் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, அதன் காரணமாக வெளியான நச்சுத் தன்மை, மற்றும் அந்த வாயுக்கள் மூலமாக மக்கள் அனுபவிக்கும் மூச்சுத் திணறல்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டின் ஆபத்துகளை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்நிலையில், வாகன உரிமையாளர்களின் உரிமைகள், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, மற்றும் அரசியல் நிலைமைகள் ஆகிய அனைத்தும் ஒன்றாக மோதும் நிலையில், Crit’Air வில்லைகளின் எதிர்காலம் இன்று நடைபெறும் வாக்கெடுப்பின் முடிவைப் பொறுத்திருக்கும்.