அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, பிரான்சில் உள்ள அமெரிக்க நிறுவனமான Owens-Illinois (O-I) தனது தொழிற்சாலைகளில் பணியாற்றிய 316 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
உலகின் முன்னணி கண்ணாடி போத்தல் உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ள O-I, மதுபான கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சில் Vergèze (Gard) மற்றும் Vayres (Gironde) என இரண்டு நகரங்களில் இந்த நிறுவனம் தனது தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது.
மொத்தம் 2,200 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், தற்பொழுது Vergèze பகுதியில் 164 பேரையும், Vayres பகுதியில் 81 பேரையும் வேலையிலிருந்து நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேசமயம், தொழிற்சங்கமான CGT, இந்த வேலைநீக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 20% வரி உயர்வை அமுல்படுத்தியது. இந்த வரி உயர்வு மதுபான விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் (Wine) உள்ளிட்ட முக்கிய மதுபானங்கள், விலை உயர்வால் போட்டியில் பின்னடைவு கண்டுள்ளன.
இதன் நேரடி தாக்கமாக, O-I நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடர் கிடைக்காததால் உற்பத்தி அளவை குறைத்து, அதன் விளைவாக ஊழியர்களை நீக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த வேலை இழப்புகள் பிரான்சின் உற்பத்தித் துறையில் நம்பிக்கையற்ற நிலையை உருவாக்கியுள்ளதுடன், சர்வதேச வர்த்தக கொள்கைகள் உள்நாட்டு வேலைவாய்ப்பில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டாகிறது. மேலும், இந்தத் தீர்மானம் ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும், உள்நாட்டு தொழிற்துறையின் ஸ்திரத்தன்மையிலும் கேள்வி எழுப்புகிறது.