பாரிஸ் நகரத் திட்டமிடல் நிறுவனம் (Apur) சமீபத்தில் குளிர்சாதனக் கருவிகளின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முதல் பகுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்ட இந்தக் கருவிகள், தற்போது பாரிஸில் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு கட்டடங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற பொருட்களாக மாறியுள்ளன. இருப்பினும், இந்த வளர்ச்சிகளுடன் சேர்ந்து பக்கவிளைவுகளும் கூடவே வளர்ந்து வருகின்றன. குளிர்சாதனங்கள் உள்ளே எவ்வளவு இதமாக குளிர்ச்சியை வழங்குகின்றனவோ அதற்கு அதிகமாக சூழலுக்கு வெப்பத்தை வழங்குகின்றன.
குளிர்சாதனங்கள் உள்ளே ஏற்படுத்தும் குளிரின் அளவுக்கு ஏற்ப வெப்பத்தை வெளியேற்றுகின்றன. பல கட்டடங்களில், இந்த வெப்பம் நேரடியாக தெருக்களில் வெளியேற்றப்படும் வகையில் அந்த குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், குறிப்பாக கோடை இரவுகளில், நகரம் தானாகக் குளிர வேண்டிய நேரத்தில் கூட அதிக வெப்பம் நிலவுகிறது.
ஜூலை மாதத்தின் வழமையான நாளொன்றை கற்பனை செய்து பாப்போம் சூரியன் கூரையையும் சாலையையும் சுட்டெரிக்கும் அந்த பகல் பொழுது முழுவதும் கடந்த பின்னர் குளிர்ச்சியான இரவுக்காக காத்திருப்போம் இரவும் சுட்டெரித்தால் ? இரவு வேளையில் நீங்கள் ஜன்னலைத் திறந்து இதமான குளிர் காற்றை சுவாசிக்க நினைக்கிறீர்கள் ஆனால் துரதிஷ்டவசமாக கீழே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதனத் தொட்டியிலிருந்து வரும் சூடான காற்று உங்களது அறைக்குள் புகுந்து விட்டது இப்பொழுது உங்களது உணர்வு ஏவாறிருக்கும்?
இது ஒரு “சூழல் வீழ்ச்சி” என்று நகரத் திட்டமிடல் நிபுணர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குறிப்பிடுகின்றனர். இந்த கருவிகள் நகரின் வெப்பத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஒலி மாசுபாடு, அதிக மின்சார நுகர்வு போன்ற பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
இந்தக் கருவிகளின் விரிவான பயன்பாடு ஒரு சுழற்சி சிக்கலை உருவாக்குகிறது: வெப்ப நிலை அதிகரிக்கிறது → மக்கள் குளிர்சாதனத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் → வெளியே வெப்பம் அதிகரிக்கிறது → மேலும் AC தேவைப்படுகிறது. இந்தத் தொடரும் சுழற்சி, குளிர்ச்சியைத் தேடி செல்லும் முயற்சியால் நகரத்தை மேலும் மேலும் வெப்பமடையச் செய்கிறது.
Apur ஆய்வின்படி, தற்போதைய இந்த நிலை தொடருமானால், பாரிஸ் கோடை காலங்களில் மின்சார தேவையை சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, நகரத்தின் சில பகுதிகளில், இரவிலும் வெப்பநிலை குறைவடையாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு பதிலாக, பாரிஸ் நகரம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
👉பாஸிவ் குளிர்சாதனக் கட்டிடங்கள்: இயற்கை காற்றோட்டம், பசுமை கூரைகள், நிழல் சுவர்கள், வெப்பநிலைத் தடுப்பு போன்ற வடிவமைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
👉பசுமை நகர அமைப்பு: மரங்கள், பூங்காக்கள், பசுமை வளிகள் மூலம் நகர சூட்டைப் பராமரிக்க இயற்கையான முறைகள் நாடப்படுகின்றன.
👉AC நிறுவல் ஒழுங்குமுறை: பொதுமக்கள் அடர்ந்த பகுதிகளில் AC கருவிகள் வெப்பத்தை நேரடியாக வெளியேற்றக்கூடிய அமைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக புதிய விதிமுறைகள் பரிசீலிக்கப்படுகின்றன.
👉மாவட்ட குளிர்சாதன மையங்கள்: தனித்தனி கருவிகளுக்குப் பதிலாக, ஒரு பிரதேசத்திற்கே மையமாய் இயங்கும் குளிர்சாதன அமைப்புகள் அமைக்கப்படுகின்றன.
பெரும்பாலான நாடுகளில், குளிர்சாதனம் நவீன வசதியின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை நம்மை நோக்கி வருகின்றது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. AC-ஐ பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கங்களை வளர்த்தல் மட்டுமன்றி, மாற்று தீர்வுகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
வெப்பநிலைகள் ஆண்டாண்டாக உயரும் வேகத்தில் நகரங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்கால வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றன. “நாம் உள்ளே குளிர்ச்சியடைய, நகரமே வெப்பப்பட வேண்டுமா?” என்பதே இந்நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி.