2025 ஆம் ஆண்டில் வரிகள் அதிகரிக்கப்படமாட்டாது: நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் உறுதியளிப்பு
பாராளுமன்றத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின்போது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.9% ஆக இருந்தது. எனினும், உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக, வளர்ச்சி கணிப்பை 0.7% ஆகக் குறைத்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் (Eric Lombard) அறிவித்தார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நாட்டின் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்காக வரிகளை அதிகரிக்கவேண்டும் என்பதில்லை. நாங்கள் தற்போதைய நிதி நிலைமையை மேலும் மோசமாக்க விரும்பவில்லை.”
இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட குழப்பத்தையும், நாட்டின் பொருளாதாரத்தில் அதனால் ஏற்பட்ட சீர்கேடுகளையும் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான பொதுச் செலவினங்களில் பாராளுமன்றம் நிறைவேற்றிய பல கட்டணங்களும் வளர்ச்சி வீதத்தைக் குறைக்கும் என ஏற்கனவே சில பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இருந்தும், வரிகளை உயர்த்துவது தற்போதைய சூழ்நிலையில் சிறந்த தீர்வாக இருக்காது என அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, நிதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
“நாங்கள் செலவினங்களை சீரமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். வருமானத்தை உயர்த்துவது என்பது ஒரே வழியல்ல. நாம் விரைவில் புதிய பொருளாதார உத்திகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.” என்று கூறினார்.