அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய சுற்று வர்த்தக வரிகள் இன்று பிரித்தானியாவில் அமலுக்கு வருகின்றது. அமெரிக்காவின் நீண்ட கால வர்த்தக நண்பர்களையே பாதிக்கும் வகையில் அவரது நடவடிகைகள் அமைந்துள்ளது.
இதில் அமெரிக்காவிற்குள் நுழையும் கிட்டத்தட்ட அனைத்து பிரித்தானியப் பொருட்களுக்கும் 10 சதவீத இறக்குமதி வரியும் செலுத்த வேண்டும். அத்துடன் அலுமினியம், மற்றும் கார்கள் மீது முன்னர் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரிகளும் அடங்கும்.
பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், எரிபொருள் விலைகள், அடமானங்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் பொருட்களின் விலைகள் அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால், தனது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் அவசியம் என்றே ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வருகிறார்.
ட்ரம்பின் இந்த அடாவடி வரி விதிப்பால் பிரித்தானியாவில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பில் நிபுணர்கள் குழு பட்டியலிட்டுள்ளது. எரிபொருள் தொடர்பில் மொத்த விற்பனை விலைகள் சரிவடைந்துள்ளதை அடுத்து, சில வாரங்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் லிற்றருக்கு 6p வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படுவார்கள்
ஆனால் வர்த்தகர்கள் பொருளாதார மந்தநிலை தேவையைப் பாதிக்கும் என்று நினைப்பதால் மட்டுமே விலை குறையும். வட்டி விகிதம் 3.79 சதவீதம் என சரிவடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் வீடு வாங்குவோருக்கு சாதகமாக அமையும். பிரித்தானிய வங்கி உட்பட உலகின் பல மத்திய வங்கிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முடிந்தவரை வட்டி விகிதங்களைக் குறைக்கவே முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இதனிடையே, ட்ரம்ப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவைத் தவிர்ப்பதனால், சில இறக்குமதிகள் மலிவாக மாறக்கூடும். ஆனால் அப்படியான பொருட்கள் மேலதிகமாக குவியும் என்றால், பிரித்தானியாவில் உள்ள தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ட்ரம்பின் வரிகளின் விளைவாக, பிரித்தானியாவில் விற்கப்படும் சமையலறைப் பொருட்கள், பானம் உள்ளிட்டவை விலை அதிகமாகலாம். அலுமினியம் சார்ந்த பொருட்களை தயாரித்து அமெரிக்காவிற்கு அனுப்பும் நிறுவனங்கள், அதிகரித்த செலவுகளை பிரித்தானியாவில் உள்ள நுகர்வோரிடம் திணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.