Latest Posts

அடங்காத நாடோடி காற்றல்லவா !

நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்ததுண்டா? சின்ன வயதில் வாகனங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்றில் ஏறி அது எங்கே கடைசியாக செல்கின்றதோ  அங்கேயே  போக வேண்டும் என்றும்  , யாராவது கடத்திச்சென்று  ஊர் சுற்றவேண்டும் என்று, நடைபெறாத விடயம் என்றாலும் மனம் இப்படியெல்லாம் யோசிக்க தோன்றும் அல்லவா? பெரும்பாலும் அனைவரும் இப்படி ஏதாவது நினைத்திருக்கக்கூடும். ஏதோ ஒன்று நம்மை கட்டி வைத்திருக்கின்றது போலும் அதை நாம் மீறி செல்ல வேண்டும் என்றும்  நினைத்திருப்போம். இந்த முயற்சியின் பலனாகவே பயணம் நம் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக  பிணைந்து காணப்படுகின்றது. 

பயணம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒன்றை தேடி அலையவைத்து  கொண்டுதான் இருக்கின்றது. பயணம் என்பது ஒரு விடை தெரியா வினா . சில பேரிற்கு மிகவும் பிடித்த ஒன்று சில பேரிற்கோ  ஏனோ தானோ என்று மாறுபட்டு கொண்டிருக்கும் ஒன்று . சிறு வயதில் யன்னல் ஓரம் எட்டி பார்க்கும் சிறுவனின் உலகம் எப்படி இருக்கும் என்ற தேடல், மனதில் எதையோ ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் தேடல், சிறுபிள்ளையின் அழுகையின் தேடல், சுதந்திரத்தை தேடும் ஒரு கூட்டுக்கிளியின் தேடல், வேலைக்கு சென்று பலகாலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தொழிலாளியின் தேடல், என எல்லா தேடலிலும் ஒரு பயணம் இருக்கும். தேடல் உள்ள உயிர்களிற்க்கு தினமும் பசி இருக்கும் என்று வைரமுத்துவின் வரிகள் மிக சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

 ஒவ்வொரு பயணமும் ஒவ்வொருவருக்கும் புதுப்புது சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பல நினைவுகள் ஊட்டுவதாகவும்  காணப்படும். சில பயணங்கள்  வினா தெரிந்து விடை அறியாதவையாகவும் சில பயணங்கள்  விடை தெரிந்து வினா அறியாதவையான புதிராகக் காணப்படும் . இது போன்ற பல சுவாரஷ்யம் மிக்க  ஒரு பயண தொகுப்பை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி  நூல்  சிறப்பாக எடுத்து  கூறுகின்றது. தான் சிறுவனாக இருக்கும் போது யன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்த்த  உலகம்  வளர்ந்து வந்து வெளியே  சுற்றிப் பார்த்த உலகம் என்று  பல நினைவுப் படிகளினூடாக வெளிப்படுத்துகின்றார். 

“ தேசாந்திரி” என்பது பல இடங்களுக்குச்சென்று வாழ்பவன் (நாடோடி ) என்று கூறப்படுகின்றது. எஸ் ராமகிருஷ்ணன் அவரது  வாழ்கை தேடல்களில் கேள்வி எழுப்பிக்கொண்டு சென்ற பயணங்களின் நினைவுகள், அவரது பால்ய வயதில் பெரியவர்கள் சொன்னகதைகள், அவர் படித்த பாடநூலில்குறிப்பிட்ட சுவாரஷ்யமான இடங்கள் போன்றவற்றிற்கு சென்று தற்போதுள்ள நிலைகள் என்ன என்றும் அதில் தான் பெற்ற அனுபவங்கள்  அவற்றில்  சில நேரம் ஏற்பட்ட  விரக்தி நிலை என தனது கிறுக்கலின் மூலம் அவரின் ஆதங்கங்களையும்  கவலைகளையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் எவ்வாறு தனது பயணத்தை அனுபவித்துள்ளார்  என்பதையும் ,  ஒன்றுமில்லை என்று நாம் நினைக்கும் அனைத்து சிறு விடயத்தையும்கூட  எவ்வாறு  ரசித்துள்ளார் என்பதையும் அவரது எழுத்துருவில் சிறப்பாக காணமுடிகிறது. அவர் சென்ற இடங்களிற்கும் நாம் நேரில் சென்று பார்ப்பது போன்ற அனுபவம் அவரது தேசாந்திரி பதிப்பை வாசித்த போது  எனக்கு ஏற்பட்டது. 

சில பண்டைய காலத்து சிற்பங்கள், கட்டிடங்கள்  என்பன எவ்வாறு  நலிவுற்று கவனிப்பாரற்று காணப்படுகின்றது என்றும் ,  மேலைதேய மற்றும்  கீழைதேய  நாடுகளில்  பழைய இடங்களின்  பராமரிப்பு எவ்வாறு வேறுபடுகின்றது என்றும்  ஆங்காங்கே   அவரின் ஆதங்கம் வெளிப்படையாக தென்படுகின்றது. எந்த ஒன்றையுமே காதால் கேட்டு அதன் நிலையை  அறிய முடியாது,  அதனை நேரடியாக சென்று பார்வையிடுதலின் உணர்வுகள் எப்படியானது  என்பதை உணர்ந்து அந்த பயணங்களை  சுவாரஷ்யம் நிறைந்த ஒன்றாக மாற்றலாம் என்று அவர் அழகாக குறிப்பிட்டுள்ளார். 

இப்புத்தகம் வாசிக்கும்போது நானும் என் சிறுவயதில் இருந்த ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றிய ஊர் பலவருடகாலம் கழித்து  செல்லும் போது புதியதாகவே தோன்றியது . 

நான் சிறுவயதில் வசித்த வீடு , கல்வி கற்ற பாலர் பாடசாலை, ஓடி விளையாடிய வீதி, அண்ணாவுடன் சைக்கிள் பயணத்தில் காலை வண்டிச் சில்லிற்குள் விட்டு அழுத நினைவுகள், வீட்டிற்குத் தெரியாமல் நாய் குட்டியை வளர்த்த நினைவுகள்  என அந்த அந்த  இடங்களிற்கு செல்லும் போது மறக்கமுடியாத நினைவுகள் வெளியில் சொல்லி தெரிவிக்க முடியாத உணர்வாக காணப்பட்டது . 

எனது இப்பயணம் சுவாரஷ்யம் நிறைந்த  ஒன்றாக  இருந்ததற்கு  இந்த புத்தகமும்  ஒரு காரணம்.  இது போன்றதே  நம் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேறு வேறான தேடல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும். அதை சுவாரஷ்யம் நிறைந்த ஒரு மறக்கமுடியாத பயணமாக மாற்றுவது  தத்தமது கைகளில் தான் உள்ளது. ஒரு கூட்டு கிளியை தூக்கி சென்று ஊர் சுற்றுவது போலவே  நானும்  சுற்றி திரிகின்றேன். கூட்டின் கதவுகள் திறப்பதற்கும் காலம் கிடக்கின்றது போலும். இருந்தாலும் இந்த சுற்றுதலிலும் பல சுவாரஷ்யம் ஒளிந்து தான்  இருக்கின்றது. 

நன்றி.

Latest Posts

spot_img

Don't Miss

spot_img