பெற்றோராக இருந்தாலும், ‘குழந்தைகளைத் திருத்துகிறேன்’ என்ற பெயரில் அவர்களை அடித்தல், சித்திரவதை செய்தல், பாரிஸில் சட்டப்படி குற்றமாகும். பெற்றோருக்கான தண்டனை, குழந்தை தன் ஆசிரியரிடமோ சக நண்பனிடமோ அல்லது பொலிஸாரிடமோ கொடுக்கும் ஒரு முறையீடால் கிடைத்துவிடும். அதன் பின்னர் தொடர் விசாரனைகளுக்குப் பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள். குழந்தைகள் காப்பங்களில் வளர்வார்கள். பாரிஸில், சிறுவன் நாகேல் மீதான பொலிஸாரின் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பில் பொற்றோரினதும் அரசினதும் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
‘என்ன மனமாற்றம் வந்து, என்னத்த கிழிக்கிறது, சட்டம் என்ன சொல்லுது!..’
கந்தசாமி கேட்டார்.
‘எதுக்கோ போய் என்னத்துக்கோ மாட்டின கதையா போச்சு..’
‘என்ன கத?’
வினோத் கேட்டான்.
‘சொல்றன்’
வாகனம் ஓட விரும்பிய தன் மனைவியை நண்பரொருவர் வாகனம் ஓடப் பழகுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். மனைவியும் இரண்டு குழந்தைகளும் பாரிஸுக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகியிருந்தன. மொழிச் சிக்கல் இருந்தது. பரீட்சைக்குப் போகாமலேயே, நானுறு யூரோ கையூட்டுக் கொடுத்து வாகன ஒட்டுனர் உரிமப் பரீட்சையில் மனைவியைச் சித்தியடையச் செய்தார் நண்பர்.
‘நெட்டுல ஒரு முப்பது யூரோவ கட்டினா.. ஈஸியா எழுதியிருக்கலாமே..’
வினோத் சொன்னான்.
‘கிழிச்சான்..’
‘அந்தளவுக்கு பொறும இருக்கல..’
-கந்தசாமி.
வாகனம் பழகும் நிலையத்தில் மனைவியைக் கொண்டு வந்து சேர்த்தார் நண்பர். தொடர்ந்து வகுப்புகளுக்குப் போக மனைவிக்கு அலுப்புத் தட்டியது. கட் அடித்தார். அன்பு மனைவியை நண்பரால் தண்டிக்க முடியவில்லை. கட்டாயமாக பழகவேண்டிய நேரங்கள் முடிந்தன. வாகனத்தை ஓடிக் காட்டுவதற்கான பரீட்சைக்கு மனைவியைத் தயார் செய்தார். மறுபடியும் கையூட்டு கொடுத்து பரீட்சைக்குத் தேதி குறித்தார்.
ஓடிக்காட்டும் இடத்தில் காரை எடுக்கச் சொல்லிவிட்டு இன்பெஸ்டர் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. பதில்களுபகுப் பதிலாக, மனைவி தலையை மட்டும் கீழும் மேலும் அசைத்தாள். போதாகுறைக்கு பக்கவாட்டிலும் ஆட்டினாள். கேள்வி கொஞ்சமும் விளங்கவில்லை, பதில் சுத்தம். நிலமை அதாளபாதத்துக்குப் போய்க் கொண்டிருந்தது.
இன்பெஸ்டர் காரை விட்டு இறங்கச்
சொன்னார்.
‘களவா கிழிக்க வெளிக்கிட்டா களவாவாவே கிழிச்சிடணும்..’
கந்தசாமிக்குப் பொறுக்க முடியவில்லை.
ஒரு கிழமை தாண்டவில்லை, கடிதமொன்று வந்தது. Commissariat பொலிஸ் அழைத்திருந்தது. கிழிஞ்சுது. இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு நண்பர் பொலிஸ் நிலையம் வந்து சேர்ந்தார்.
கேள்விகள் சரிமாறியாக வந்து விழுந்தன.
நண்பர் தன் தவறு எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். ஐந்து வருடத் தடை உத்தரவு. கூடவே, பொலிஸ் கொடுத்த அறிவுரைகளையும் அள்ளி வாங்கிக் கொண்டார்.
குழந்தைகளை இருவரையும் தனியே அழைத்து விசாரித்தனர்.
‘அம்மா படிக்கிறவவா?’ கார் பழகப் போறவவா?’
குழந்தைகளிடம் கேட்கப்பட்டது.
‘இல்ல, அம்மா அடிக்கிறவா..’
என்றாள் மூத்தவள்.
‘அக்காவுக்கு அம்மா அடிக்கிறவ வா?’
‘அக்காவுக்கு மட்டுமல்ல, எனக்கும் அடிக்கிறவா..’
இளையவள் சொன்னாள்.
- லக்சன் வித்தியா