ஆம் நான்தான் நானே தான். என்னடா இவள் கூட எதையோ எழுத தொடங்கி விட்டாள் என்று நினைக்க தோன்றும் என்று நம்புகின்றேன். என் பேனையை எடுத்து வெள்ளைக்காகிதத்தில் இதை எழுதத்தொடங்கும் போதே என் தங்கை இவளிற்கு ஏதோ நடந்துவிட்டது புத்தகமும் பேனையுமாக இருக்கின்றாள் என்று சிரித்து என்னை விமர்சித்துக்கொண்டு இருந்தாள்.
அதென்னவோ தெரியவில்லை ஒரே ஒரு புத்தகம்தான் எல்லாவற்றிக்கும் காரணம். என்ன செய்வது கா/பொ/த உயர்தர பரீட்சைக்கு பின்பு பெரிதாக எழுதுவதும் இல்லை என்னிடம் உடைமையாக ஒரு பேனை கூட இல்லை.
தரம் 5 படிக்கும் எனது குட்டி தங்கையிடம் பேனை கடன் கேட்டுத்தான் இதை எழுதவே ஆரம்பிக்கின்றேன். அவள் அந்த நீல நிற பேனையை தரும்போது ஏதோ ஒன்றரைகோடி பணம் கடன் வாங்கி இருக்கின்றாய் என்ற ஒரு முக தோற்றத்துடன் என்னை பார்த்து விட்டு கவனமாக கையாளு என்று சற்று விறுமாப்புடன் தந்தாள். இருப்பினும் அந்த பேனை என் வாழ்க்கை போல எழுதுவதற்கு சற்று சோம்பேறித்தனமாக காணப்பட்டது. இதை மீண்டும் மாற்றிவிட்டு வந்து மிகுதியை தொடரலாம் என தோன்றுகின்றது. மீண்டும் என் அன்பு தங்கையிடம் சென்று ஒரு கருப்பு நிற பேனாவை கடன் வாங்கி வந்து எழுத ஆரம்பிக்கின்றேன்.
முன்பு சொன்னது போலவே ஒரே ஒரு புத்தகம் தான் இப்பொழுது நான் இங்கு கிறுக்கிய வண்ணம் இருப்பதற்கு காரணம். புத்தக வாசிப்பு அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்க்கியமான ஒன்றுதான். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நாம் அனைவரும் பாலர் பாடசாலை தொடக்கம் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்த வண்ணமே காணப்படுகின்றோம் . அப்போது தெரியவில்லை நாம் பேசுவதற்கும் எழுதுவதற்க்கும் வாசித்த புத்தகங்கள் பெரும் துணையாக நிற்கின்றன என்று. “வசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” என்று சும்மாவா சொன்னார்கள். எப்பொழுதும் தொலைபேசியும் கையுமாக இருந்த என்னை இப்படி பேனையும் காகிதமுமாக மாற்றியதை எண்ணி அந்த அற்புத புத்தகம் கொஞ்சம் கர்வம் கொள்ளத்தான் செய்கின்றது. ஏனெனில் எனது அம்மா சொல்லியே திருந்தாத என்னை ஒரு செம்மஞ்சள் நிற புத்தகம் மாற்றி விட்டது.
என்னடா புத்தகம் புத்தகம் என்கின்றாளே அதைப்பற்றி கூறுகிறாள் இல்லை என்று சற்று சினமுடன் இருந்திருப்பீர்கள். என்ன செய்வது என்னுடைய கிறுக்கல் சற்று பெரிய இடத்தை பெற வேண்டும் என்பதற்காக புத்தகம் பற்றிய விமர்சனம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இப்பொழுதும் சொல்லவில்லை எனில் என் வீடு தேடி வந்து நீங்கள் என்னை அடிக்ககூடும். சரி சொல்கின்றேன். அந்த அற்புதபுத்தகம் நான் சென்ற வேலைத்தளத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். ஆம் ஒரு பிரசித்தி பெற்ற கனேடிய எழுத்தாளர் , தலைமை பேச்சாளர் மற்றும் வழக்கறிஞர் ரொபின் சர்மாவால் எழுதப்பட்டது. அவரை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். அவருடைய ஒரு அற்புத களஞ்சியம் என்றே சொல்லலாம் “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” என்ற புத்தகம். ஆனால் ஒன்று இந்த புத்தகத்தை வாசித்தவரிடம் ஏதோ ஒரு வகையில் ஒரு சிறு மாற்றம் கூட வராமல் இருந்திருக்காது. அப்படியொரு அருமையான கற்பனைக்காட்சி நிறைந்த புத்தகம்.
மனித வாழ்க்கை என்றால் என்ன? எதை நோக்கி நம் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கின்றது? எதை நோக்கி செல்ல வேண்டும் என்று கற்பனைகளால் உலக உண்மையை உணர்த்திய ஒரு புத்தகம். வாழ்க்கையை எவ்வாறு நாம் கொண்டு செல்ல வேண்டும் நமது வாழ்க்கைக்கு எது மிகமுக்கியமானது என்பது பற்றிய ஒரு சிறப்பானபுத்தகம் இது. இப்புத்தகத்தை படிக்கும் போது நாம் வேறு ஒரு உலகத்திற்கு செல்வது போன்ற ஒரு பரவச நிலையை அடைய முடிகிறது. இரு மனிதர்களின் உரையாடல் தொடர்பு மூலம் இக்கதையை கொண்டு சென்றது சிறப்பாக காணப்படுகின்றது.ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கை தத்துவங்களால் நிறைந்த ஒரு சிறப்பு மிக்க கற்பனை கதையாக காணப்படுகின்றது . இதில் மேலைத்தேய கலாசாரம், கீழத்தேய கலாசாரம், அவர்களின் வாழ்க்கை சூழல்கள் என எப்படி ஒருவரது வாழ்க்கை சிக்கல் மிக்கதாக இருந்து சந்தோஷம் நிறைந்த ஒன்றாக மாறுபடுகின்றது என்பது பற்றிய ஒரு சிறப்பான திருப்புமுனையை கொண்ட படைப்பம்சமாக காணப்படுகின்றது. நாம் அனைவரும் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான சூழலிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு வெளியுலக உணர்வை தருவதாக இப்புத்தகம் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.
இப்புத்தகத்தை படிப்பதற்க்கு முதல் என் வாழ்க்கை வேறானது. படித்து முடிந்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக காணப்படுகின்றது. முன் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையற்ற வாழ்க்கையுடன் காணப்பட்டேன் என்றே கூறலாம் . என்ன செய்வது? என்ற குழப்பம் தினமும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குழப்பமான மனநிலை இப்புத்தகத்தை வாசித்த பின்பு ஒரு ஒழுக்கமான பயிற்சி, ஒரு நாளை எவ்வளவு பயன்மிக்கதாய் மாற்றியமைக்கலாம் என்ற திட்டமிடல் என்று ஒரு நாளில் நான் செய்யும் வேலைத்திட்டம், நேர முகாமைத்துவம் என எனக்குள் பெரும் மாற்றமே ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் நான் சரியான கோபக்காரி ஏனோ நான் புத்தக வாசிப்பை தொடர்ந்ததாலோ என்னவோ எனது கோபம் எங்கே சென்று விட்டது என்று எனக்கே தெரியவில்லை. இப்படி என் வாழ்க்கை ஒரு புத்தகத்தால் மாற்றப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இப்பொழுது முதல் இருந்ததை காட்டிலும் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
எனது தந்தை எப்போதும் சொல்லுவார் நிறைய புத்தகங்களை வாசி என்று . அப்பொழுது புரியவில்லை இப்பொழுது புரிகின்றது அதன் தாக்கம் என்னை பெரிதும் மாற்றி உள்ளதை. நான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளேன் என்று சிந்திக்க வைக்கின்றது . முன்பு எனது அப்பா கூறும்போது பொருட்ப்படுத்தாமல் விட்டுவிட்டு இப்பொழுது ஆச்சரியப்பட்டு நிற்கின்றேன். தத்தமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம். மகிழ்ச்சியை விரும்பாதவர் எவரும் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்று நம்புகின்றேன்.என்னுடைய புத்தக தாகத்தை தூண்டுவதற்க்கும் முக்கியமான ஒன்றாக இப்புத்தகம் எனக்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றது.
நன்றி.