பாரிஸ், ஆகஸ்ட் 26, 2025 – பாரிஸ் 19ஆவது வட்டாரத்தில் (Philharmonie de Paris அருகே) திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த சோகச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர் RATP பேருந்து மோதி கடுமையாகக் காயமடைந்துள்ளார்.
மாலை சுமார் 5.45 மணியளவில் “Petits Ponts” பேருந்து நிறுத்தம் அருகே, நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தன்னுடைய பந்தை எடுக்க திடீரென வீதியில் நுழைந்துள்ளார். பாதசாரி கடவை வழியே செல்லாமல், இரண்டு நிறுத்தப்பட்ட வண்டிகளுக்கு நடுவே சாலைக்குள் ஓடிச் சென்றபோது, Pantin மாநகரை நோக்கிச் சென்ற 170ஆவது எண் பேருந்தின் பக்கவாட்டில் மோதிக் கொண்டுள்ளார். அதன்பின், பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டார்.
Pantin பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் கடுமையாகக் காயமடைந்த நிலையில், பாரிஸ் 15ஆவது வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். தலையிலும் இடுப்பிலும் கடுமையான காயங்களுடன் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோதிலும், தற்போது நிலைமை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின், பேருந்து ஓட்டுனர் கடுமையான அதிர்ச்சியடைந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனையில் எந்த தடயமும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. “சிறுவன் திடீரென வாகனங்களுக்கு நடுவே வந்து விட்டதால் தவிர்க்க முடியவில்லை” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பேருந்து ஓட்டுனரிடம் கோபம் வெளிப்படுத்தினர். உடனடியாக RATP, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கும் சம்பவத்தை கண்டவர்களுக்கும் உளவியல் ஆதரவு வழங்கும் குழுவை அமைத்ததாக அறிவித்தது.
பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம், “வீதி விபத்தில் மூன்று மாதங்களுக்கு குறைவான காயங்கள் ஏற்படுத்துதல்” மற்றும் “பாதுகாப்பு கடமையை மீறுதல்” என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கான மேலான விசாரணை சாலை விபத்து நீதித் துறை பிரிவு (STJA)க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவனுடன் இருந்த நண்பர்களில் ஒருவரின் வாக்குமூலப்படி, அவர் உண்மையில் வீதியில் “தடுமாறி விழுந்தபோது” பேருந்து மோதி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.