இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடைக் காலத்தின் ஆரம்ப நாட்களை போல ஒரு அசாதாரண வெப்ப நிலையை உணர்ந்துள்ளனர். இரவு முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தில் பதிவான வெப்பநிலை 13°C முதல் 14°C வரை இருந்தது, இது ஏப்ரல் மாதத்தில் வளமையாகக் காணப்படும் வெப்பநிலையைவிட சுமார் 5°C அதிகமாகும்.
அதாவது, பரிஸில் உணரப்பட்ட இந்த வெப்பநிலை ஜூன் மாத தொடக்கத்தில் நிலவும் வெப்பமாகும், இது வினோதமான காலநிலை சுழற்சியின் ஒரு வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. மேலும், சில இடங்களில் சனிக்கிழமை இரவில் பதிவான வெப்பநிலை ஞாயிறு காலை வரை மாற்றங்கள் ஏதுமின்றி ஒரேயளவாக இருந்துள்ளது. அதாவது இரவு முழுவதும் வெப்பம் நிலைத்திருந்தது.
இந்த வெப்பமான இரவுக்கு முக்கியக் காரணமாக, தெற்குப் பகுதிகளிலிருந்து பரவும் சூடான காற்று குறிப்பிடப்படுகின்றது. மத்திய மற்றும் தெற்குப் பிரான்ஸில் ஏற்பட்ட வெப்ப அலைகள் பரிஸின் தெற்கு வழியாக நகரத்தில் நிலவிய காற்று அலைகளில் கலந்து, நகரத்தின் வெப்பநிலையை உயர்த்தியதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் ‘வெப்பமான இரவுகள்’ அதிகரித்து வருகின்றன. இதனாலேயே கடந்த காலங்களில் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலைகள், இப்போது ஏப்ரலிலேயே காணப்படுகின்றன. இது ஒரு காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாகக் கருதப்படுகிறது.
ஏப்ரல் மாதம், பொதுவாக குளிர்கால முடிவும், கோடைக்கால தொடக்கமும் சேரும் மாறுபட்ட பருவம். இத்தகைய பருவங்களில் வானிலை ஏற்றத்தாழ்வுகள் வழக்கமானவை என்றாலும், இந்த அளவுக்கு அதிகமான வெப்பம் வருவது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தொடரக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வாளர்கள் இதே போன்ற காலநிலை தொடரலாம் என்றும், இவ்வாறு அதிகரிக்கும் வெப்பம் நகர மக்களின் வாழ்நிலையிலும், சுற்றுச்சூழலிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் கூட இரவுகளில் குளிர் காற்றுக்கு பதிலாக வெப்பமான காற்று நிரம்புவது, நகர திட்டமிடலிலும், சக்தி நுகர்விலும் மாற்றங்களை தேவைப்படுத்தும்.