வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் முக்கிய கோரிக்கை
2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
முன்னணி இடங்களில் இராணுவத்தினர் தங்கியுள்ளமை குறித்து ஆதங்கம்
மாவீரர் துயிலுமில்லங்கள் சிலவற்றில் இராணுவத்தினர் தங்கியிருப்பதை அவர் கவனத்திற்கொண்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோடு, முல்லைத்தீவில் இது மேலும் அதிகரித்துள்ளதாகவும், அங்கு இரண்டு மக்களுக்கு ஒருவராக இராணுவத்தினர் உள்ளதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்மக்கள் நினைவு நாள்களை அனுசரிக்க வேண்டும்
மாவீரர்களுக்கான நினைவு நாள்களை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுசரித்து வருகின்றனர். குறிப்பாக, நவம்பர் 27 அன்று மாவீரர் துயிலுமில்லங்களில், மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நினைவு கூருவதை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில், இந்த நிகழ்வுகள் எந்த தடையுமின்றி அமைதியாக நடைபெறக்கூடிய சூழல் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க வேண்டும்
முள்ளியவளை, அளம்பில், தேராவில், ஈச்சங்குளம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க வேண்டும் எனவும், மக்கள் தங்கள் உறவுகளை நினைத்து, அஞ்சலி செலுத்தும் உரிமையை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்மக்களின் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.