வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (08.03.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்துக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட அவர், காணாமல் போன உறவுகளை தேடி போராடும் பெண்களை மகளிர்விவகார அமைச்சர் நேரில் சந்தித்து உரிய பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2923 நாட்கள் நீடிக்கும் போராட்டம்
யுத்த காலத்தில் தனது பிள்ளைகள், கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்த பின்னர் அவர்கள் காணாமல் போனதை உணர்ந்த தாய்மார்கள், மனைவிகள் கடந்த 2923 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த வருடமும் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பெண்கள் ஒன்றுகூடி, தங்களுக்கான நீதி வழங்கப்படுமா என அரசாங்கத்திடம் வினவினர்.
“நீதி கிடைக்க வேண்டுமென போராடும் மகளிருக்கு பதிலாக, அவர்கள் மீது நீதிமன்ற தடையுத்தரவு, காவல்துறை மிரட்டல்கள், பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் விசாரணைகள், வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் போன்ற ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன” எனவும், பல ஆண்டுகளாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் ஏமாற்றம் மட்டுமே ஏற்படுத்தியதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
92000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் – வாழ்க்கைப் போராட்டம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 92,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் போராடி வருகின்றன. குறைந்த வருமானம், பாதுகாப்பின்மை, சமூக ஒதுக்கம், கல்வி பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 9063 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பலர் குடும்பச் சுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
சிறுவர்களின் எதிர்காலம் – அச்சுறுத்தலுக்குள்
பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் வாழும் குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முல்லைத்தீவில் பெற்றோரை இழந்த 390 சிறுவர்கள், தாயை இழந்த 514 சிறுவர்கள், தந்தையை இழந்த 2263 சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறார்கள் 292 பேர் உள்ளனர்.
அமைச்சரே, முல்லைத்தீவிற்கு வாருங்கள்!
“மகளிர் தினத்திலேயே முல்லைத்தீவில் போராட்டம் நடைபெறுகிறது. மகளிர் அமைச்சர் முல்லைத்தீவிற்கு வந்து அவர்களை சந்திக்க வேண்டும். ஆறுதல் வார்த்தைகள் கூட அவர்களின் வேதனைகளை குறைக்க உதவும். உண்மையான தீர்வுகளை வழங்க புதிய அரசு முன்வர வேண்டும்” என ரவிகரன் அழைப்பு விடுத்தார்.
மாற்றுத் திறனாளிகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வாழ்வாதார வசதியில்லாத பெண்கள் அனைவருக்கும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.