உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன உள்ளுணர்வு இவர்களுக்கு வழிகாட்டுதலில் வாழ்வார்கள் இவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை,இதனால் அதிகமாக பயப்பிடவும் மாட்டார்கள்!
இயற்கை இவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளை சொந்தமாக நிறைவேற்றி கொள்ளும் ஒரு வாழ்க்கை முறையினை வாழ்ந்து கொள்வார்கள். உணவு,இருப்பிடம்,நீர் என எல்லாவ்வற்றையும் இவர்கள் சொந்தமாக இயற்கையில் இருந்து நேரிடையாக பெற்று கொள்வார்கள்.இவர்கள் சின்ன சின்ன ஆசைகளில் பேரின்பத்தை கண்டு கண்டு இயற்கையாக வாழ்ந்து கொள்வார்கள்!
மழை வந்தால் ரசிப்பார்கள், ஆட்டு குட்டிகள்,மரங்கள் இலைகள் ஆடுதல்,மின்னல்,ஆற்று நீர் என்று இவர்களின் ரசனைகள் இருக்கும். கூட்டு குடும்ப முறையில் இயற்கையான பொருட்களை வைத்து இயற்கை இருப்பிடங்களை சொந்த நிலத்தில் அவர்களாக அமைத்து கொள்வார்கள்! உணவுக்கு விவசாயம்,கால்நடைகள்,நீர் விநியோகம்,சமைத்தல் என மிகவும் இலகுவான முறையில் இவர்களின் உழைப்பு இருக்கும்! ஆழ்ந்த அமைதியுடன் வாழ்வார்கள்! எல்லாரையும் அரவணைத்து பகிர்ந்து உண்பார்கள்!
இங்கு எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று,இயற்கையின் ஒருங்கிணைந்த eco system என்ற சமத்துவம் இங்கிருக்கும்,போர் பட்டினி, துன்பம் நோய்களுக்கு இங்கு இடமில்லை,சந்தேகம்,வீண் சண்டை,பொறாமை போன்ற பழக்கங்கள் இவர்களிடம் இருக்காது! இவர்களின் வாழ்விடம் இவர்களின் கால் நடை தூரத்தில் இருக்கும்.அங்குமிங்கும் ஓடி அலையமாட்டார்கள்! நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து கொள்வார்கள்!
வெறும் மண்ணில் நிலா வெளிச்சத்தில் சந்தோசமாக படுத்து நிம்மதியாக தூங்க கூடியவர்கள்! மெதுவாக நடப்பார்கள்,கண்களால் சிரிப்பார்கள்! அமாவாசை இருளில் ஆயிரம் பில்லியன் நட்சத்திங்களின் கீழ் உறங்குவார்கள்! இங்கு பிரிவுகளோ மாறுபட்ட கருத்துக்களோ அதிகம் இருக்காது! சுகதேவியாக வாழ்ந்து தம்மை வாழ வைத்த இயற்கைக்கு தமது நன்றியுணர்வை கொடுத்து அதனை கடவுளாக மதித்து மகிழ்வான நினைவுகளோடு சாவை வரவேற்று அதனை கொண்டாடி இறப்பார்கள்!
அடுத்து இரண்டாம் வகையினர்: இவர்கள் கற்றறிந்த மக்கள் கூட்டமாக இருப்பார்கள்! பண்ணைய நாகரீக தொடர்ச்சியை தவறவிட்ட அல்லது கலப்பாக தோன்றி சமூக கூட்டங்களாக இருப்பார்கள்! மேல் மனதின் அலையும் போக்கில் இவர்கள் வாழ்க்கையும் வரலாறும் இருக்கும்! கண் போன போக்கில் கால் போக ஆசைப்படும் சமூகம் இவர்கள்!
உள்ளுணர்வை இயற்கையை நம்ப மாட்டார்கள்,அதிகமாக சிந்திப்பார்கள்,இயற்கையை அழித்து அதிலிருந்து விலகி வாழ நினைப்பார்கள்! இயற்கையை வெறுப்பார்கள்,எல்லாம் செயற்கையாக உருவாக்க கொள்வதே சிறப்பு என்று அதற்கான கட்டமைப்பை உருவாக்கி கொள்வார்கள்,எல்லாமே படிப்பு,பின்னர் பணம் என்ற அடிப்படையில் உருவான நகரத்து சமூகத்தை தோற்றுவிப்பார்கள்.
நகரங்களின் பின்னர் அரசுகளையும் தோற்றுவிப்பார்கள்! அடிப்படை வசதிகளை தாண்டி ஆடம்பர,அதிகார ஆசைகளுக்காக அதிகம் வாழ நினைப்பவர்கள்,வானுக்கும் மண்ணுக்கு தாவ பேராசைபடுவார்கள்! இவர்களின் அதிகபட்ச உழைப்பே பணத்தையும் தங்கள் கீழ் வாழும் மக்கள் கூட்டத்தையும் அவர்களுக்காக வேலை செய்ய வைப்பதாக இருக்கும்.
ஆழ்ந்த அமைதி மகிழ்வான வாழ்க்கை என்பது இவர்களுக்கு எட்டாகனி,போட்டி பொறாமை,பயம் போன்றவற்றை சமூகத்தில் விதைத்து அதனை வட்டியோடு அறுவடை செய்து கொள்வர்கள்!
இவர்களின் வாழ்விடம் ஒரிடத்தில் நிலையாக இருக்காது.ஊர் விட்டு ஊர்,கண்டம் விட்டு கண்டம்,கோள் விட்டு கோள் கூட தாண்டுவார்கள்! மனித இனத்தை முன்னேற்ற போவதாக கூறி கொண்டே இருப்பார்கள்!
விரைவில் விடியல்,துன்பங்கள் எல்லாம் தீரும் என்பார்கள்! ஆனால்
எல்லாவற்றையும் அடிமைப்படுத்தி,ஆள்வதற்கே ஆசைப்படுவர்கள்! சமூகத்தை ஒரு பிரமிட் கட்டமைப்புக்குள் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி ஒன்றை ஒன்று தாழ்த்தி கொள்வதாகவும் எல்லாவற்றின் மேல் முடியில் தாம் இருப்பது போன்று உருவாக்கி கொள்வார்கள்! இவர்களின் உலகில் பசி பட்டினி போர் துன்பம் நோய் என்பன எப்போது தாண்டவமாடி கொண்டிருக்கும்.
இங்கு எல்லாவற்றிலும் பிரிவுகள் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும், உலகில் பிரச்சினைகள் அதற்கு தீர்வுகள் பின்னர் அதிலிருந்து இன்னொரு பிரச்சினைகள்,அதற்கு தீர்வுகள் என்று மனித ஈகோ வளர்ந்து கொண்டே செல்லும்,
Ego system) வாழ்வை வரலாறை தொலைத்துவிட்டு ஆசைகளுடன் அவலமாக சாவுக்கு பயந்து ஓடி ஓடியே இறப்பார்கள்!
முதல் இரண்டு வகையினரும் எண்ணிக்கையில் சொற்பமாக இருப்பார்கள் . முதல் வகையினர் மிக சொற்பமாக அவர்கள் இருப்பதே உலகிற்கு தெரியாத நிலையில் இருப்பார்கள், இரண்டாம் வகையினர் அதிகாரத்தில் அதிகமாக இருப்பார்கள்! மூன்றாவது வகையினரே எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள்.இவர்கள் இரண்டு வகைக்கும் இடைப்பட்டு காணப்பட்டாலும் இரண்டாவது நகரத்து சமூக வாழ்வியலால் அதிகமாக ஈர்க்கப்பட்டு கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள்! இந்த மூன்றாவது வகையினரே அதிகமாக நகர,அரச சமூகத்தை இயக்கும் சக்தியாக இருப்பார்கள்!
இவர்களை பொறுத்தவரை பிறப்பது ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள கல்வி திட்டத்தில் இருப்பதில் பிடித்ததை படித்து விட்டு வேலைக்கு சென்று இரண்டாவது வகையினர் உருவாக்கி இயக்கி கொண்டிருக்கும் Ego systemக்கு தோள் கொடுப்பார்கள்,இவர்களுக்கு படித்த கல்வி பட்டத்தை சமூக அந்தஸ்து போதையாக்கி மாதாந்த சம்பளத்தை லஞ்சமாக கொடுத்து அடிமைப்படுத்தி இவர்கள் தாம் அடிமைகள் என்று உணராத வகையில் வைத்திருப்பார்கள்! மாத சம்பளம் பெறுவதை உலகின் மிக பாதுகாப்பான ஒன்றாக உணர்வார்கள்!
விழுந்து விழுந்து வேலை செய்வார்கள்! அப்படி வாழ்வதை பெருமையாக நினைத்து கொள்வர்கள்! இவர்களுக்கு பொழுதுபோக்கும் சிற்றின்பமுமே அதிக நாட்டமாக இருப்பார்கள்,ஆண்டு விடுமுறையில் பெரும் பணம் செலவழித்து விடுமுறை சுற்றுலா சென்று முதலாம் வகையினர் ஆயுள் முழுதும் வாழும் வாழ்க்கையே நான்கு நாட்கள் வாழ்ந்து சந்தோசப்படுவார்கள்,அழுது கொண்டே விடுமுறை முடித்து வெறும் கையோடு வேலைக்கு திரும்புவார்கள்.ஆனாலும் முதலாம் வகை வாழும் வாழ்க்கைக்கு முழுமையாக திரும்ப இவர்களுக்கு விருப்பம் இருக்காது! நகர சிறையில் நோகாமல் மாத பணத்தில் வாழ்வது போதுமென நினைப்பார்கள்,இவர்களை பய உணர்வை ஆட்டுவிக்கும்.
இவர்களிடம் சொத்து என்று குறிப்பிடதக்க பேப்பர் பண தாள்கள் மட்டுமே இருக்கும்,அந்த பணதாள்களும் இவர்கள் கையில் இல்லாமல் இரண்டாம் வகையினர் உரிமையுள்ள வங்கிகளில் இருக்கும், குடியிருக்க நிலமில்லாத அடுக்குமாடி வீடுகளில் சிறை போன்ற ஆனால் அலங்கரிக்கப்பட்ட கூடுகளில் நகர மத்தியில் அதை அந்தஸ்து என்று பெரும் விலை கொடுத்து அல்லது மாதம் மாதம் பணம் செலுத்தி வாழ்வார்கள்! கார்கள் விமானங்கள் என்று போக்குவரத்து,ஆடம்பர பொருட்கள் வாங்க,பொழுது போக்கு என்று இவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்க நரக சிறைகள் நகரங்கள் என்ற பெயரில் இயங்கும்,இவர்களும் தலைமுறைகளும் அங்கு நிரந்தர கைதிகள்!
போர் அழிவுகள்,பஞ்சம் பட்டினி,இயற்கை அழிவுகள்,நோய் என்று அதிகமாக பாதிக்கப்படுவர்கள் இவர்களாகதான் இருப்பார்கள்! தமக்குள் ஒரு வட்டத்தை வரைந்து அதற்கு அடிமை வாழ்வை வாழ்ந்து ஏன் வாழ்கிறோம் எதற்கு என்று தெரியாமல் ஓட்டமும் நடையுமாக திரிந்தே இறந்து போவார்கள்!
வாழும் உலகின் தலைவிதியை இந்த மூன்றாவது வகையினரே தீர்மானிப்பார்கள் ஆனால் இவர்களிடம் சொந்த வழி எதுவும் இருக்காது! இவர்கள் வெறும் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள்,தங்களுக்கு சாதி மதம் இனம் என பிரிந்து கிடப்பார்கள்,இவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது!
முதலாவது வகையினரிடம் இயற்கையான ஒரு வழி இருக்கும்,இரண்டாவது வகையினரிடம் செயற்கையான ஒரு வழி இருக்கும்,ஆனால் மூன்றாம் வகையினரிடம் சொந்தமாக ஒரு வழி இல்லாமல் தம்மை அதிகமாக கட்டுபடுத்துகின்றன ஆளுகின்ற இரண்டாம் வகையினரின் பின்னால் செல்வார்கள்…சென்று கொண்டுள்ளனர்….
ஆனால் இவர்களில் இருந்துதான் அவர்கள் பிறப்பார்கள்….