உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை உலக தரத்தில் உங்களால் செய்ய முடியும்.
மனிதர்கள் வேலை குறித்து சலிப்பு அடைவதை தாண்டி அவற்றை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று கவனம் செலுத்துவதே அவர்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி வளர செய்வதற்கான செயன்முறையாகும்.
என்ன வேலை செய்கிறோம்,அது உலகத்தோரால் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை எல்லாம் கவலைப்படாமல் அவற்றில் கவனத்தை குவிக்காமல்,முழு கவனத்தையும் நீங்கள் செய்யும் வேலையின் நிகழ்கணத்தில் குவியுங்கள்.நீங்கள் செய்யும் வேலை மேம்படும்,அது துப்பரவு தொழிலாளியோ அல்லது ஜனாதிபதி வேலையோ எதுவாகினும் வேலை என்ன என்பதிலோ அதை யார் செய்கிறார்களோ என்பதில் எதுவும் இல்லை.அந்த வேலை எப்படி செய்யப்படுகின்றது என்பதை வைத்தே அளவிடப்படுகின்றது.
உங்களின் சிறிய கடையை நீங்கள் ஒரு அரசு நாட்டை நிர்வகிப்பதை விட,ஒரு பெரிய கம்பனி முதலாளியை சிறப்பாக கூட நிர்வகித்து கொள்ளலாம்.சீரான ஒழுக்கம்,கவன குவிப்பு மூலம் இவற்றை நீங்கள் இப்போது இருக்கிற இடத்தில் செய்கிற வேலையில் இருந்தே இக்கணத்திலேயே அடைந்து கொள்ளலாம்.அப்படி உங்களை நீங்கள் வளப்படுத்தி கொள்ளும் போது உங்கள் தோரணை உங்களை அறியாமலேயே ஒரு நாட்டு அதிபர் அளவுக்கு மாறி போயிருக்கும்.நீங்கள் அதற்கு தகுதியானவர்தான்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்டு கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமது படிப்பு செலவை கல்லூரி ஏற்கும் என்றால் கல்லூரி துப்பரவு தொழிலாளியாக பணிபுரிய தயாராக இருப்பதாக கூறி அந்த வேலையை செய்தார். பின்னர் மாணவர் ஒன்றிய தலைவராகி நாட்டுக்கே அதிபர் ஆனார்.
அவர் துப்பரவு செய்த வேலையும் ஏதோ வந்துவிட்டோம் என்று வேலை செய்யும் ஒரு புலம்பெயர்ந்த தமிழரோ,ஆபிரிக்கரோ,அயல் தேசத்து இளைஞரோ செய்யும் வேலையும் ஒன்றா..? வேலை ஒன்றுதான் ஆனால் அந்த வேலையை செய்த விதம் வேறு! அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு உலகிற்கு தெரிந்த அவரின் திறமைகள்,அவர் துப்பரவு தொழிலாளியாக இருந்த போது கற்றவையும் சேர்த்துதான்.அவர் அப்போதே அமெரிக்க ஜனாதிபதி மேசை துடைப்பது போலவே உணவக மேசைகளை துடைத்து வந்தார்.
இங்கு கூலி தொழிலோ அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தொழிலோ செய்யப்பட்ட வேண்டிய விதம் ஒன்றுதான்..அந்த விதத்தில் அவரவர் வேலையை செய்வதன் மூலம் கூலி தொழிலாளியும் அமெரிக்க அதிபராக முடியும்.
என்ன செய்கிறோம் என்பதை விடுத்து செய்யும் வேலை எதுவாகிலும் அதன் மீது நிகழ்கணத்தில் கவனத்தை குவித்து ஒரு ஒழுக்கத்துடன் செய்து வரும் போது அது உங்களை உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.அதற்காக எல்லோரையும் நாட்டு அதிபராகுமாறு சொல்லவில்லை.உங்களுக்கு நீங்கள் ராஜாவாக இருந்து கொள்ளுங்கள்.. இதன் மூலம் இருப்பதில் பெரிய இடத்தையும் கீழே உள்ள துப்பரவு தொழிலையும் ஒப்பிட்டு செய்யும் முறையில் அவை எல்லாமே ஒன்றுதான் என்று கூறுகிறோம்.
துப்பரவு தொழிலாளியிலிருந்து நாட்டு அதிபர் ஆவது அப்படி வந்தவர்களை தவிர அனைவருக்கும் அதிசயமாக தெரியும் ஆனால் அப்படி வந்தவர்களுக்கு அது அதிசயமில்லை,துப்பரவு தொழிலோ/நாட்டு அதிபர் வேலையோ அவர்களுக்கு ஒன்றுதான்.எந்த வேலையாக இருந்தாலும் நிகழ்கணத்தில் ஒழுக்கத்துடன் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள்.அவர்கள் அவ்வளவுதான் செய்கிறார்கள். இரண்டையுமே சரியாக செய்யாதுவிடின் அந்த இடத்தில் இருப்பவர்கள் மூக்கை பொத்தி கொண்டுதான் இருக்க வேண்டும்.
நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் சம்பந்தப்படும் நீங்களும் அந்த வேலை எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது..கவனத்தை அதில் குவிக்க தொடங்குங்கள்…