Latest Posts

உங்கள் வாழ்க்கையில் சிக்கலா? இதை செய்யுங்கள்…

உபதேசத்ததுக்காக வந்திருந்த புத்தரிடம் ஒரு குடும்பஸ்தர், “வாழ்க்கையை சிக்கல்கள் இல்லாமல் வாழ முடியாதா.?” என்று கேட்டார்.

புத்தர் ஒன்றும் பேசாமல் தன் உடலின் மேல் போர்த்தி இருந்த சால்வையை எடுத்து, அவர் கண் முன்னேயே நான்கைந்து முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே கேட்டார், “உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி.. முன்பு இருந்த துணி தானா.? இல்லை வேறு துணியா.?”

குடும்பஸ்தர் கொஞ்சம் யோசித்துவிட்டு, “ஒருவகையில் ரெண்டும் ஒரே துணிதான். ஆனால், முன்பு இருந்த துணி சுதந்திரமானது. உங்களால் எளிதில் போர்த்திக் கொள்ள முடியும். இப்போது அப்படி முடியாது. அதுதான் வித்தியாசம்‌.!” என்றார்.

புத்தர் புன்னகைத்தார், “அதேதான் நமக்கும். நாம் எல்லோரும் இயல்பில் சுதந்திரமானவர்கள் தான். ஆனால், சிலர் தாங்களே முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர்.!”

“அப்படியானால் இதிலிருந்து தப்பிப்பது எப்படி.?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் குடும்பஸ்தர்.

“சரி, எனது அடுத்தக் கேள்வியைக் கேட்கிறேன். இந்த முடிச்சுகளை அவிழ்க்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார் புத்தர்.

“முடிச்சுகளை கவனிக்க வேண்டும். எப்படி முடிச்சுகள் போடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துவிட்டால் அவிழ்ப்பது எளிது.!” என்றார் குடும்பஸ்தர்.

“சரியாகச் சொன்னீர்கள். இப்போது நான் முடிச்சுகளை அவிழ்க்கப் போகிறேன்.!” என்றபடி முதலில் போட்ட முடிச்சிலிருந்து ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தார் புத்தர். ஆரம்பத்தில் போட்டிருந்த முடிச்சுகளை சுலபமாக நீக்கிய புத்தரால், கடைசியாகப் போட்ட முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. அவர் கேட்டார், “இவைகளை ஏன் என்னால் அவிழ்க்க முடியவில்லை என்று தெரிகிறதா.?”

குடும்பஸ்தர் சொன்னார், “நீங்கள் நினைவோடு போட்ட முடிச்சுகளை எளிமையாக நீக்கிவிட்டீர்கள்.. ஆனால், பேசிக்கொண்டே நினைவின்றி நீங்கள் போட்ட கவனமற்ற முடிச்சுகள் இப்போது அவிழ்க்க முடியாமல் சிக்கலாக இருக்கிறது.!” என்றார்.

அதற்கு குடும்பஸ்தரைப் பார்த்து புத்தர் சொன்னார், “நீங்கள் மிகவும் சரியாகச் சொன்னீர்கள்… அது தான் வாழ்க்கை. அது தான் வாழ்க்கையின் சிக்கல்.!“ என்றார்.

ஆம் நண்பர்களே.. நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாமேதான்.. சிக்கல்கள் இல்லாவிடில் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. ஆனால், சமயங்களில் நம்மை அறியாமல், நம் நினைவின்றி இடும் முடிச்சுகளைத்தான்.. அவிழ்க்க முடியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

Latest Posts

spot_img

Don't Miss

spot_img