பாரிஸ்: கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு முதல் 25-ம் தேதி அதிகாலை வரை, பாரிஸ் (7-ம் மாவட்டம்) ஐஃபெல் கோபுரத்திற்கு எதிரே உள்ள சாம்ப்-து-மார்ஸ் பூங்கா அருகே 32 வயதுடைய உக்ரைன் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குப் பலியாகினார்.
போலீசார் அளித்த தகவலின்படி, அதிகாலை 2.40 மணியளவில் மதுவில் மயங்கியிருந்த ஒருவன், அதேபோல மதுவில் இருந்த அந்தப் பெண்ணை பலவந்தமாக ஒரு புதரின் பின்னால் இழுத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் அந்தப் பெண்ணைத் தொட்டு, உடலுறவும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு.அந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் உதவி கோரிய குரல்கள் அருகே ரோந்துப் பணியில் இருந்த Night Crime Squad போலீசாரால் கேட்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற அவர்கள் சந்தேக நபரை கைது செய்தனர்.
யார் இந்த சந்தேக நபர்?
முதற்கட்ட விசாரணையில் அவர் 17 வயது லிபிய இளைஞன் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரது வயதும், தேசியதுவமும் சந்தேகத்திற்குட்பட்டது. தற்போது அடையாளம் சரிபார்க்கப்பட்டு வருகிறது என பாரிஸ் வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்
பாதிக்கப்பட்ட பெண் பிரெஞ்சு மொழி அறியாதவராகவும், அப்பொழுது மதுவில் இருந்ததால், முழுமையான வாக்குமூலம் இன்னும் பெறப்படவில்லை. மீண்டும் விசாரணைக்குப் பின் துல்லியமான தகவல் உறுதி செய்யப்படும்.
ஈபிள் கோபுரம் சுற்றுவட்டாரத்தில் பாலியல் வன்முறை அதிகரிப்பு
இது புதிய சம்பவமல்ல. கடந்த 2023 கோடையில் மெக்ஸிகோ சுற்றுலா பெண், அதே ஆண்டு அக்டோபரில் ஆங்கில போலீஸ் பெண், கடந்த ஆண்டு லாத்வியா நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆகியோர் இதே இடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானது பதிவாகியுள்ளது. வருடத்திற்கு சுமார் ஆறு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்தப் பகுதியில் பாதுகாப்பு பிரச்சினை நீண்டகாலமாகவே சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
பாதுகாப்பு பற்றிய புள்ளிவிவரங்கள்
2023-ல் சாம்ப்-து-மார்ஸ் பகுதியில் 5 பாலியல் பலாத்காரங்கள், 9 பாலியல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. 2024-ல் அதே இடத்தில் 1 பாலியல் பலாத்காரம், 7 பாலியல் தாக்குதல்கள் நடந்ததாக பாரிஸ் போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.30 கட்டுப்படுத்தக்கூடிய கேமரா, 85 நிலையான கேமரா, 10 கேமரா ட்ரொகடேரோ தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு போதுமானதாகவே உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.