புனிதங்களை அவமானத்துள்ளாக்காதீர்.
ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தமது கொள்கைகளை கொண்டு செல்லும்போது பல்வேறு விடயங்ஙளை கருத்தில் கொள்ளல் வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கையாளும்போது மிக அவதானமாகக் கையாளல் வேண்டும்.
தனியே உணர்ச்சி அரசியல், தேர்தலுக்கான அரசியல் என்பது இழப்புக்களிலேயே முடிவடையும்.
பிரச்சினைகளை கையாளும் விதம் தரும் விளைவுகள் எவ்வாறானதாக அமையும் என்பதனை ஊகிக்க கூடயவர்களாக அல்லது தீர்மானிக்க கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
பெரியதொரு இலக்கை அடைய நம்மிடையே தெளிவு இருத்தல் வேண்டும். கட்சிசார்ந்து, தன்முனைப்புடன் செயற்பாடுகள் தவிர்த்து ஒன்றுபடல் வேண்டும். எல்லாவற்றையும்விட மற்றவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிடினும் அவற்றினை ஆராய்ந்து பார்க்கவாவது வேண்டும்.
எதிர்த்தரப்பிலும் பலவிதமானவர்கள் இருப்பார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் எப்படி கையாளுதல் வேண்டும் என்பதைப்பற்றி சிந்தித்தல் வேண்டும்.
நமது பலம் பலவீனம் அறிதல் வேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு சர்வதேசமே இன்னும் மௌனமா? என்றால்? உயிர் போகும்போது மௌனமாய் இருந்தவர்கள், இப்போ கதறவா போகின்றார்கள்?
கேவலம் ஒரு கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிடும் அளவுக்கு நம் நிலையை கொண்டுவந்துள்ளார்கள்.
எந்தவொரு சர்வதேசமும் இந்தியா உட்பட தமக்கு நன்மையுடன் குறைந்தது தமக்கு பாதகமின்றியே இன்னொரு நாட்டு விவகாரத்தில் தலையிடுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் பொலிசார் முன்னிலையில் பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கதறுபவர்கள், திலீபன் ஊர்தியில் அடிவிழும்போது மௌனமாய் வாய்பொத்தியது ஏன்? இந்த அறிவு முதலிலேயே இருந்திருந்தால் தியாக தீபம் திலீபனுக்கு இந்த அவமானம் நிகழ்ந்திருக்குமா?
தொடர்ந்து உணர்ச்சிவசப்படலாலும் உசுப்பேற்றலாலும் நிகழப்போவது என்ன?
30 வருடமாக கவனிக்காத சர்வதேசமா? அல்லது 30 வருடமாக மனநிலையில் மாற்றங்கானாத சிங்கள மக்களா இப்படியான நிகழ்வுகளால் மாறப்போகின்றார்கள்?
அல்லது 2009 பின் 14 வருடத்தில் தலையிடாத சர்வதேசமா தலையிட போகின்றார்கள்?
அல்லது பொருளாதார நெருக்கடியில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் மாறாத சிங்கள மக்களா இந்நிகழ்வுகளை நேர்மறையாக சிந்திக்கப் போகின்றார்கள்?
இவைபற்றி சிந்திக்காது இனவாத தணலை அணையவிடாது ஊதிப்பெருப்பிக்க நாமும் தூபம் போடுகின்றோமா?
ஓர் தலைமையின்றி, தலைமைகளில் நம்பிக்கை இன்றி, ஓரணியின்றி, ஒற்றுமையின்றி ….இளைஞர்கள் தொடர்ந்து புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேசமோ அல்லது வெளியில் உத்தியோகபூர்வமாக எந்த அமைப்புக்களினதும் பூரணமான உதவிகள் இன்றிய நிலையில் எமது அனுகுமுறைகள், நினைவேந்தல்கள் சரியான முறையில் அணுகப்படவேண்டியதொன்றாகும்.
பிரச்சினை வரும் என்று தெரிந்தும் … சிலவற்றை செய்வதன் மூலம் எதை எதிர்பார்க்கின்றீர்கள்? அல்லது இதுவரை எதை மாற்றியுள்ளீர்கள்?
கண்டனம் தெரிவிக்கா விடின் தேர்தல் தோல்வி வருமென்றோ தேசியவாத முகமூடி பொய்க்குமென்றோ கண்டனம் செய்வதை விடுத்து இனியாவது சிந்தித்து செயற்படுவதே ஆத்மாக்களுக்கு செய்யும் பேருதவியாகும்.