இங்கு உங்களை சுற்றி நிகழ்பவை எல்லாமே பிரபஞ்ச நோக்கத்திற்காக நிகழ்ந்து கொண்டுள்ளன.நீங்கள் பிறப்பது,படிப்பது,தொழில் செய்வது,பிடித்த பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து கொள்வது முதல் கோபம் கொள்வது சண்டை போடுவது என்று எதை செய்தாலும் அவை பிரபஞ்ச நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன.. இவற்றை தாண்டி அவை உங்களை கொண்டு தனிதனியாக செய்யப்பட வைக்கப்பட்டு பிரபஞ்ச நோக்கமாக ஒன்றிணைக்கப்படுகின்றது.
நீங்கள் இவற்றை உங்கள் பக்கத்தில் இருந்து பார்க்கும் போது உங்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் எல்லாவற்றையும் தனிப்பட்ட ரீதியாக எடுத்து கொள்வீர்கள்..இங்கிருந்த இருக்கின்ற ஒரே ஒரு பெருவிருப்பம்தான் உங்களை உங்கள் அம்மா அப்பா ஊடாக படைத்தது,அவர்களை அவர்களின் அம்மா அப்பா என்று உங்களின் பாட்டன் பாட்டி என்று எல்லாரையும் படைத்தது.தொடர்ந்து அதன் இயக்கத்தின் ஒரு சார்பியக்கமாகவே உங்களின் இயக்கமும் நடைபெற வைக்கப்படுகின்றது.
இங்கு நீங்கள் நினைப்பது போல் நீங்கள் யாரும் தனி தனி ஆட்கள் இல்லை! ஒரு பெரும் ஒருமையின் (oneness) சிறு சிறு பகுதிகள்.அந்த ஒருமை ஒரு சமுத்திரம் போல் நீங்கள் அதில் ஒரு துளி, ஒரு துளி தன்னை தனியாக துளியாக நினைக்கும் போது அது அலையாக அலைகழிக்கப்படுகின்றது. அது,தான் சமுத்திரத்தின் ஒரு பகுதியாக உணரும் போது அதற்கு ஒரு அமைதி கிடைக்கின்றது.அதற்கு அது சமுத்திரத்தை அறிந்திருத்தல் வேண்டும்.சமுத்திரத்தில் உள்ள அதே உப்பு,அதே உட்கருதான் சிறு துளிக்கும் உண்டு என்று அது ஒரு பகுதி என்றும் உணரும் போதே அங்கு விடை கிடைகின்றது.
அதே போல் மனிதர்களும் தம்மை தனிதனியாக அப்பெரும் ஒருமையில் நிறைந்துள்ள பிரபஞ்சத்தில் இருந்து பிரித்து கொள்ளாமல் தங்களை அவற்றின் ஒரு பகுதியாக பார்ப்பதற்கு தம்மை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்,அதுவே மனித வாழ்வில் சில மக்கள் தங்களுக்கு தெரிந்தும் பல கோடி மக்கள் தங்களுக்கு தெரியாமலும் தேடி கொண்டிருக்கும் கேள்விக்கான பதிலாகும்.
உலகில் கேள்வி தெரியாமல் பதில் தேடி கொண்டிருப்பவர்களே அதிகம்! இங்கு மனிதர்களின் பிரித்து பார்க்கும் மனபாங்கு உலகின் அத்தனை அமைதியின்மைக்கும் அடிப்படை காரணமாகும்.இனம் மதம் சாதி நிறம் அந்தஸ்து என எத்தனை விதமாக பிரிக்க,பிரபஞ்சத்தில் இருந்து பிரிந்திருக்க முடியுமோ அத்தனை முறைகளில் மனிதர்கள் பிரிவினையை தேடி கொள்கிறார்கள்! மனிதர்கள் தங்களுக்குள் பிரிந்து கொள்வதன் மூலம் உண்மையில் பிரபஞ்ச ஒருமையில் இருந்து தங்களை தற்காலிகமாக பிரித்து கொள்கிறார்கள் என்பதே உண்மை!
தன்னையறிந்து கொள்பதிலிருந்து தன்னை சுற்றியுள்ள பிரபஞ்ச உலக இயக்கத்தை அறிந்து கொள்பவர் தன்னையோ தனக்கு நடப்பவற்றையோ தனியாக எடுத்து கொள்ளமாட்டார்.எதையுமே தனியாக எடுத்து கொள்ளாமல் இருப்பதில் இருந்தே பிரபஞ்ச இயக்கம் முதல்படியை அடையமுடியும்.தன்னையறிந்து கொள்வது தன்னை தானே பிரிந்துள்ள மனித கூட்டத்தில் இருந்து தனிமைபடுத்தி கொள்வதில் ஆரம்பிக்கும்.பிரிந்துள்ள மனித உலகத்தில் இருந்து நாம் பிரிந்து கொள்வதே தனிமைப்படுத்தி கொள்வதற்கான முதல்படியாகும்.(Minus*Minus = Plus)
நாம் மக்கள் கூட்டதிலேயே தொடர்ந்து எம்மை திணித்து வைத்திருக்கும் போது எமக்கு அந்த கூட்டம் ( mass crowd ) செய்வது எல்லாம் சரி போன்றே தெரியும்,அதனை தாண்டி இதுவே இலகுவானது என்று உணர்வோம்! ஆனால் இங்கு அப்படி இல்லை! அது பாதுகாப்பு பற்றி பய உணர்விலுல் காலத்தின் ஓட்டத்தால் ஏற்படும் மன நெருக்கடியிலும் ஏற்படுவது!
நீங்கள் டிவியில் மீடியாக்களில் பார்ப்பது போல் அவசரமாக அவசரமாக இங்கு எதுவும் நடந்த கொண்டு இல்லை! ஒரு எல்லையற்ற பிரபஞ்சம் அமைதியாக பொறுமையாக இயங்கி கொண்டுள்ளது! அவ்வளவுதான்! ஒரு தனிமனிதன் தன்னுடைய செயல்கள்,தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட சமூக இயங்கியல் அதனை சுற்றி உள்ள உலக இயங்கியல் என ஒவ்வொன்றாக கட்டுடைத்து கொள்ளும் போதே அவனுக்கு பிரபஞ்ச இயங்கியலுக்குரிய பயண அனுமதி கிடைக்கின்றது..