அண்மையில் இலங்கையின் தலைவர் அநுரதிசநாயக்கா பின்வருமாறு பேசியிருந்தார். 👉 ” 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ( 🏏) நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாட்டில் போர்ச்சூழல், அப்போது செயற்பாட்டிலிருந்த சில ஆயுதக் குழுவினர் ஆயுதங்களை வைத்துவிட்டு, அன்று போட்டியினைப் பார்த்தனர் என நான் கேள்விப்பட்டேன் ” .
☝️ இப் பேச்சினை ஒட்டியதாகக் குமுக ஊடகங்களில் சில வாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிகழ்வு தொடர்பாக நான் நேரில் கண்ட ஒரு காட்சியினையும், ஊடகங்கள் மூலம் அறிந்த ஒரு காட்சியினையும் கூறுகின்றேன்.
கண்டதைச் சொல்லுகின்றேன், எங்கள் கதையினைச் சொல்லுகின்றேன் – அப்போது யாழ் நகர் உட்பட வலிகாமம் பகுதி முற்று முழுதாகப் படையினர் வயப்பட்டிருந்தது. மக்கள் தென்மாராட்சிப் பகுதிக்கும், வன்னிக்கும் இடம் பெயர்ந்திருந்தனர். கைதடி – நாவற்குழிப் பகுதி அப்போது எல்லைப் பகுதியாக பதற்றத்துடன் இருந்தது.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சேர்ந்து இறுதிப் போட்டியினைக் காண அணியமாகினர், அதில் பல்கலைக்கழகத்தில் இருந்து போராளிகளாகிய சிலரும் இருந்தனர், பொது மாணவர்களுமிருந்தனர். கைதடிப் பகுதி எல்லைப் பகுதி , அங்கு மின் வசதியுமில்லை, அதனால் எந்திரத்தினை இயக்கியே மின்னினைப் பெற வேண்டும், ஆனால் எந்திரம் ( Generator)இயங்கும் ஒலி, படையினருக்குக் கேட்டால், அவர்கள் எறிகணைகளை ஏவுவார்கள், அதனால் குழி ஒன்று வெட்டி, அதனுள் எந்திரம் வைக்கப்பட்டு இயக்கப்பட்டது, அதனால் ஒலி கட்டுப்படுத்தப்பட்டது, அதே போன்று படங்கின் மூலம் மறைப்புச் செய்யப்பட்ட ஓரிடத்திலேயே தொலைக்காட்சி வைக்கப்பட்டது,
இல்லாமல் திறந்த வெளியில் வைத்தால், இரவு நேரத்தில் தொ.கா ஒளி பெரிதாகத் தெரியும். வண்டுகள் ( உளவு வானூர்திகள்) எளிதாகப் படையினருக்கு இடத்தினைக் காட்டிக் கொடுக்கத் தாக்குதல் நடைபெறும், அதனாலேயே படங்கு மூலமான மறைப்பு ( போட்டி – பகல் இரவு ஆட்டம்). இத்தகைய ஏற்பாடுகளுடன் போட்டியினைப் பார்த்தோம். அங்கிருந்த போராளிகளுக்கு இலங்கை வென்றதில் மகிழ்ச்சியே ஏன் என இறுதியில் சொல்லுகின்றேன். போட்டியில் இலங்கை வென்றதும் எல்லைக் காவலரண்களில் இருந்த படையினர் இப் பகுதியினை நோக்கித் துப்பாக்கிச் சூடுகளையும், எறிகணைத் தாக்குதலையும் நடாத்தினர். அவர்கள் அவ்வாறுதான் அன்று வெற்றியினைக் கொண்டாடினர். எறிகணை வீச்சில் பொது மக்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன.
அறிந்த செய்தி – இச் செய்தியினைப் பலர் ஊடகங்கள் ஊடாக அறிந்திருக்ககலாம். அக் காலப் பகுதியில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த படைவீரன் ஒருவன் பின்னர் விடுதலையாகித் தென்னிலங்கை சென்ற போது வழங்கிய நேர்காணலில் தான் அப்போது தடுப்புக்காவலில் இருந்த போது, உலகக்கிண்ண இறுதிப் போட்டியினைத் தனக்குப் பொறுப்பாக இருந்த போராளிகளுடன் சேர்ந்து, தொ.கா. இல் பார்த்ததாகவும், இலங்கை அணி வென்ற போது அவர்களும் சேர்ந்து தன்னுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
முடிவு- இறுதிப் போட்டிக்காக அதிகார முறையிலான போர் நிறுத்தம் எதுவும் அப்போது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை அணி வென்ற போது, என்னதான் போரில் எதிரியாக இருந்தாலும், தமது அயல்நாடு என்ற முறையிலும், தாம் முன்னர் ஒன்றாக இருந்த நாடு என்ற அடிப்படையிலும் போராளிகளில் சிலர் மகிழ்ந்தது உண்மையே! அதே வேளை மட்டைப்பந்தாட்ட வெற்றி என்ற மாயையினால் ‘ சிறிலங்கா’ என்ற அடையாளத்தினைத் துறந்திருந்த தமிழர் மீண்டும் அதற்குள் சிக்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் சிலரிடம் ( குறிப்பாக அரசியல்துறை சார்ந்த சிலரிடம்) இருந்தது. போட்டியில் வென்றமையால் சிங்களவர் சிலர் அதனைத் தமிழருக்கு எதிரான வெற்றி போலக் கொண்டாடிய நிகழ்வுகள் சிலவும் தென்னிலங்கையில் இடம்பெற்றிருந்தன.
இவையெல்லாம் 1996 ஆம் ஆண்டு நிகழ்வுகள். மீண்டும் 2007 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் இலங்கை அணியும் ஆத்திரேலிய அணியும் மோதின. அன்றிரவு படையினரும் தென்னிலங்கை மக்களும் தொ.கா பெட்டிகள் முன் மெய் மறந்திருந்த நிலையில் கொழும்பு வான் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. 1996 ஆம் ஆண்டு போல அப்போது நிலைமை இல்லை. இவைதான் நடந்தவை.
- நன்றி – இலங்கநாதன் குகநாதன்