ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் காலரா பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அது என்னவென்றே தெரியாமல் விழித்தார்கள். அவர்கள் பார்க்கும் முதல் ஒளித்துணுக்கு அதுதான். திரையில் எதைப்பார்த்தீர்கள் என்று அவர்களிடம் வினவியபோது, யாரிடமும் பதிலில்லை. ஒருவர் மட்டும் கோழி ஓடுவதைப் பார்த்ததாகச் சொன்னார். படத்தை எடுத்தவருக்கே அதிர்ச்சி. இதென்னடா புதிதாகக் கோழி என்று. மீண்டும் படத்தை ஆராய்ந்தபோது, ஒரே ஒரு ஷாட்டில் ஓரத்தில் கோழி ஒன்று ஓடுவது தெரியவந்தது.
புலனறிவால் நம்மைச் சுற்றி இருப்பவற்றையே மனித மூளை அதிகமாக பதிவு செய்கிறது. பிற்பாடு ஊடகம் ஒன்றுடனான தொடர்புறுத்தலின்போது ஏற்கெனவே பதிவானவற்றில் உள்ள பொருள்களுடன்தான் முதலில் கவனம் குவிகிறது. ஒரு ஒளிக்காட்சியில் துல்லியமாக ஞாபகத்தில் தங்குவது ஏற்கெனவே நன்கு பழக்கமான வடிவங்கள்தாம். ஆப்ரிக்க பழங்குடிக்கு கோழி தென்பட்டது போல.
நாம் காண்பது அனைத்தும் நம் பிரக்ஞையால் அளக்கப்பட்டதன் மாதிரி வடிவங்களே; உண்மையான ஒன்றை அல்ல என்று இம்மானுவேல் காண்ட் சொல்வார். அதாவது நாம் காணும் மரம் இப்படி இருக்கிறது என்று நம் பிரக்ஞை அதற்கொரு வடிவத்தைச் சூட்டி அளிக்கிறது. அதையே நாம் அறிகிறோம். ஆனால் பருவெளியில் உண்மையான அதன் இருப்பு நம் அறிவால் அளக்க முடிந்தது அல்ல. நமக்கு மரமெனத் தெரியும் உரு யானைக்கு வேறு ரூபம் கொண்டது. எறும்புக்கு இன்னும் வேறானது. அத்வைதம் சொல்லும் மாயை என்ற கருத்தாக்கமும் இதுவும் ஏறக்குறைய ஒன்றுதான்.
வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று பொருத்தமான வடிவங்களை மனித மூளைக் கண்டடைந்ததுகூட அசாத்தியமான சாதனையாகும். இவ்வடிவங்களில்தான் மனித வாழ்வு நிலைகொண்டிருக்கிறது. வீட்டை நாம் ஏன் அமீபா வடிவில் கட்டுவதில்லை? சதுர, செவ்வக வடிவமே வசதியானது என்பதை கண்டறிந்துவிட்டோம். வடிவியல் எனும் கணிதத்துறை அதி அற்புதமானது. கட்டடத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகள் அனைத்தும் அதனாலேயே சாத்தியமானது.
கதைகளைக்கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறை நமது. அன்றைக்கு ஒளிப்படம் என்றால் சினிமா மட்டுமே. பொதுவாக வாய்மொழியாகச் சொல்லுவதைவிடவும் காட்சி மொழியில் சொன்னால் அது மனித மூளையில் ஆழமாகப் பதியும்; கற்பனை வளம் பெருகும் என்பது அறிவியல்பூர்வ உண்மை. இந்தத் தலைமுறையில் குழந்தைகள் விடீயோக்களை கண்டே வளருகின்றன. அறிதல் வந்த உடனே அவர்களுக்கான டிவியும் செல்போனும் இணையமும் அறிமுகமாகிறது. அவர்களுக்கான காட்சித்துணுக்குகள் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கின்றன. பாடத்திட்டங்கள், கதைகள் உள்பட.
ஆக, காட்சிகளோடு அறிவை வளர்த்துக் கொண்ட இந்தத் தலைமுறை நம்மைவிடவும் கூடுதல் திறனுடனும் நுண்ணுணர்வோடும் உருவாகி வந்திருக்க வேண்டும். சூழலைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ரீல்ஸ் என்ற பெயரில் பெண்கள் அழகையும் ஆண்கள் அசட்டு வீரத்தையும் முன்வைப்பதைத் தவிர்த்து ஒன்றையும் காணோம். அழகிற்கும் வீரத்திற்கும் சங்ககால மரபிலிருந்தே ஒரு தொடர்ச்சி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இவை மானுடரின் இயல்பான வெளிப்பாட்டு உணர்ச்சிகள். இந்தத் தலைமுறையும் இவற்றை தொழில்நுட்பங்களின் உதவியோடு வெளிப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளலாம்.
ஆனால் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாற்றுணர்ச்சி அற்ற கும்பலே இந்த தலைமுறையிலும் கூடுதலாக உருவாகிவருகிறது. வழக்கம்போல ஏதோ ஒன்றிரண்டு மட்டும் தப்பிப்பிழைக்கிறது. புத்தக விற்பனையும் கலை, கலாச்சார நிகழ்வுக்கு வரும் கூட்டமும் இதற்கெல்லாம் சான்று. ஆக, நாம் தொழில்நுட்ப உதவியோடு கூடிய தலைமுறை மாறுபாட்டைச் சரியான விதத்தில் கணிக்கவில்லை; பயன்படுத்தவில்லை. அல்லது அதில் ஏதோ போதாமை உள்ளது. கல்வித்துறையின் தோல்வி என்று இதை வகுக்கலாமா எனத்தெரியவில்லை. ஆனால், பேச்சு, வரி வடிவத்திலிருந்து மாறி காட்சி வடிவத்தில் கதை சொல்லத் தொடங்கிய இடத்தில் சர்வ நிச்சயமாக ஏதோ ஒன்றை நாம் தவறவிட்டுள்ளோம்.
நன்றி ப்ரதீப் Source